தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது.
மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்பது, படங்கள் வரைவது, நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது , மாணவர்களுக்கு ரோபோக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல வித்தைகளை மனிதர்களை போலவே செய்தது சோஃபி. மனிதர்களுக்கு ஒரு சிறந்த உதவியாளராக திகழ்ந்த சோஃபியின் திறனை கண்டு வியந்த சவுதி அரேபிய அரசு , அதற்கு அந்த நாட்டிற்கான குடியுரிமையை வழங்கியது. சோஃபிதான் உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ. இந்தியாவில் கான்ஃபிரன்ஸ் ஒன்றில் உரையாற்ற வந்த சோஃபியா சேலைகட்டி வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ”க்ரேஸ்” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. குறிப்பாக கொரோனா சூழலில் தனிமையில் இருக்கும் வயதான நோயாளிகளுடன், அன்பாகவும் நேர்மறையாகவும் உரையாடுமாம். நீல நிற செவிலியர் உடையில் இருக்கும் இந்த ரோபோவை ஆசிய பகுதி மக்களின் தோற்றத்தில் வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுப்பு நிற கூந்தலில் இருக்கும் க்ரேஸின் மார்பக பகுதியில் ஒரு தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நோயாளிகளின் உடல் வெப்பநிலையை அளவிடுமாம். க்ரேஸானது ஆங்கிலம் , மாண்டரின் மற்றும் கன்டோனீஸ் ஆகிய மூன்று மொழிகள் பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற பேரிடர் சமயங்களில் முன்கள பணியார்களின் சுமையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் க்ரேஸ் உருவாக்கப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தனிமைப்படுத்துதலி இருந்த நோயாளிகள் பலரும் எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்ததை அடுத்து, க்ரெஸ் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் முதற்கட்ட பீட்டா வெர்சன் க்ரேஸ் ரோபோவை அறிமுகப்படுத்த ஹேன்ஸன் திட்டமிட்டுள்ளது. சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவ சேவை மையங்களில் இந்த சோதனை தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள க்ரேஸ் ரோபோவின் விலை ஒரு சொகுசு காரின் விலைக்கு ஒப்பானது என கூறப்படுகிறது. ரோபோக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியவுடன் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது.