கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் பரமத்தி பாலு. இவர் தான் வசித்து வரும் வீட்டில் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் செலவு செய்து, சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் சோலார் ஜெனரேட்டரை அமைத்திருந்தார். வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கும் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சோலார் மூலம் மின் உற்பத்தி மற்றும் வீட்டின் பயன்பாடு ஆகியவை குறித்து கணக்கீடு செய்யும் நெட் மீட்டர் இணைப்புக்காக பரமத்தி பாலு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அன்று ரூ.6,025 சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர், பரமத்தி பாலுவுக்கு பிறகு விண்ணப்பம் செய்த சிலருக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. தனக்கு மட்டும் தரப்படவில்லை என்ற காரணத்தினால் 9 மாதங்களுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அன்று கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மன உளைச்சல் ஏற்படுத்தியது உட்பட பல்வேறு காரணங்களுக்காக ரூ. 5 லட்சம் இழப்பிடு வழங்க வேண்டும்.
மேலும், மின்வாரியத்தில் கூடுதலாக மின்கட்டணம் செலுத்திய ரூ.10 ஆயிரத்தையும் திருப்பித் தர வேண்டும் எனவும் புகார் தெரிவித்திருந்தார். (புகார் அளித்த ஒரு சில வாரங்களில் இவருக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது). இது குறித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், நேற்று வழங்கிய உத்தரவில், சம்பந்தப்பட்ட துறையினரின் சேவை குறைபாட்டால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மனுதாரர் மின்வாரியத்தில் செலுத்திய மின்கட்டணம் ரூ.10 ஆயிரம் மற்றும் இழப்பீடாக ரூ. 2 இலட்சம் வழங்க வேண்டும். மேலும், அந்தத் தொகையை பணம் கட்டும் தேதி வரை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். அதனையும் மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள், கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ இதனை வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்