டெஸ்லா நிறுவனம் வெளியிடவுள்ள புதிய கார் ஒன்று 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் கட்டுக்கதை என்று பலரும் கூறிவந்த நிலையில் அந்த தகவலை சில தினங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியுள்ளார் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க். டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற வகை காரில் புதிதாக SpaceX Package என்ற எலக்ட்ரிக் கார் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த வாகனம் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டுமாம். அப்படி எட்டும் பட்சத்தில், உலகின் அதிவேகமான எலக்ட்ரிக் கார் இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 






உலகின் அதிவேக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அதே போல தானியங்கி கார் தயாரிப்பிலும் டெஸ்லா நிறுவனம் பெருமளவு ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஹைப்பர் கார் குறித்த தகவல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. டெஸ்லா நிறுவனம் 2008ம் ஆண்டு எலன் மஸ்க் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக தானியங்கி கார் தயாரிப்பில் வெகு பிரபலமாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 'ஆட்டோ பைலட்' முறையில் இயக்கப்பட்ட டெஸ்லா கார் விபத்துக்குள்ளாகி இருவர் உரியிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 




அறிவியல் கண்டுபிடிப்புகளின் உச்சமாக தானியங்கி வாகனங்கள் பார்க்கப்படுகிறது. விமானம், கப்பல், ரயில் போன்ற பல போக்குவரத்துக்கு வாகனங்கள் பல ஆண்டுகளாக தானியங்கி முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களின் அன்றாட பயன்பாட்டில் இந்த தானியங்கி கார்களின் ஆதிக்கம் தற்போது அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இதில் தானியங்கி கார் தயாரிப்பில் டெஸ்லா நிறுவனம் முன்னோடியாகவே திகழ்கிறது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் SpaceX Package என்ற எலக்ட்ரிக் கார் 1.1 நொடிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் கூறப்படுவது உண்மையா என்ற கேள்வியை முன்வைக்க, அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளார் எலன் மஸ்க். 




அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'ஆம், ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் த்ரஸ்டர் ஆப்ஷன் தொகுப்புடன் இது சாத்தியமே. மேலும் இது பாதுகாப்பான ஒன்றாகவே இருக்கும், ஆனால் அதே சமயம் மிகவும் தீவிரமாகவும் இருக்கும். மருத்துவம் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஏற்புடையதாக இருக்காது. மேலும் இது ஒரு ஹார்ட்கோர் ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும்' என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.