ISRO Achieves Major Space Cleanliness Milestone in 9 Months:சர்வதேச விண்வெளிக் கொள்கைகளை மிகத் துல்லியமாகப் பின்பற்றி, விண்வெளியை தூய்மையாகப் பராமரிப்பதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) புதிய சாதனையைப் படைத்துள்ளது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்டின் மேல்பகுதியை வெறும் ஒன்பது மாதங்களிலேயே மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்து, விண்வெளிப் பாதையைப் பாதுகாப்பாகப் பராமரித்து இந்தியா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

Continues below advertisement

விண்வெளியில் சுற்றிய ராக்கெட் பகுதி

கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்.-3 எம்5 (LVM3-M5) ராக்கெட் மூலம் 'சி.எம்.எஸ் - 3' (CMS-3) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, விண்வெளியில் பிற செயற்கைக்கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஆபத்தும் ஏற்படாத வகையில், அந்த ராக்கெட்டின் மேல் பகுதி சுழன்றவாறு அதே சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது.

பூமியை நோக்கி வந்த பயணம்

விண்வெளிக் கழிவுகளைக் குறைக்கும் திட்டத்தின்படி, அந்த ராக்கெட் பாகத்தின் சுழற்சியைக் கட்டுப்படுத்தி படிப்படியாக பூமியை நோக்கி வரவழைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எம்.ஓ.டி.ஆர். (MOTR) ரேடார் மையம் மூலமாக இதன் நகர்வுகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. வளிமண்டலக் காற்றுடன் உராய்வு ஏற்பட்டதால் உண்டான கடும் வெப்பத்தில், ராக்கெட்டின் பெரும்பான்மையான பாகங்கள் எாிந்து சாம்பலாயின.

Continues below advertisement

அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்ந்தது

மீதமிருந்த ஒரு சில சிறிய பாகங்கள் மட்டும் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. வழக்கமாகச் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட பின், அவற்றின் ராக்கெட் கழிவுகள் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியிலேயே சுற்றித் திரிந்து, புதிதாக அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் மீது மோதி பெரும் விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. ஆனால், இஸ்ரோவின் துல்லியமான திட்டமிடலால் வெறும் ஒன்பது மாதங்களிலேயே அந்த ராக்கெட் மேல்பகுதியை பூமிக்குக் கொண்டு வந்து வெற்றிகரமாக அழித்து, விண்வெளி கழிவு மேலாண்மையில் உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது.