ஒரு பிராண்ட் சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே தொழில்நுட்ப பிரியர்களுக்கு அது குறித்தான தேடலும் , ஆர்வமும் அதிகரித்துவிடும். அப்படி மொபைல் மார்கெட்டில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திய பிராண்ட்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்13. எப்போதான்ய்யா ரிலீஸ் பண்ணுவீங்க என காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக , சத்தமே இல்லாமல் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்பிள் ஈவெண்ட் வருகிற வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி , அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் 13 வெளியாவது உறுதியாகியுள்ளது. முன்னதாக செப்டம்பர் 15 ஆம் தேதி வாக்கில் ஐபோன் 13 வெளியிட படலாம் என இணையத்தில் தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 13 மாடல்களை பொருத்தவரை Ming-Chi Kuo கணித்த மாதிரியே மூன்று விதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதாவது ஐபோன் 13, ஐபோன்13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி என நான்கு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே ஐபோன் என்றாலே விலை அதிகம்தான். குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லை என்பதால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. தற்போது வெளியாக உள்ள ஐபோன் 13 ஆனது விலையில் புதிய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.
திரை :
அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள ஐபோன் 13 மினி மாடல் 5.4 இன்ச் ஸ்கிரீனுடனும், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் ஸ்கிரீனுடனும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீனுடனும் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஃபேஸ் டிடக்ஸனில் மாற்றம்:
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் அவதியுற்று வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே முகத்தில் மாஸ்க் அணிந்த வண்ணம் ஐபோன்களை அன்லாக் செய்ய முடியாது. அதற்கு மாற்றாக , மாஸ்க் அணிந்திருந்தாலும் ஐபோனை அன்லாக் செய்யும்படியான புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
IOS 15:
தற்போது வெளியாக உள்ள இந்த ஐபோன் 13 இல் IOS 15 இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மே மாதம் நிகழ்ந்த ஈவெண்ட் ஒன்றில் ஐ.ஓ.எஸ் 15 ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த இயங்குதளத்தின் சோதனை ஓட்டம் ஒரு சில பதிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபோன் 13 அறிமுக விழாவில் ஐ.ஓ.எஸ் 15 - இன் டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது. IOS 15 இல் பல மாறுபட்ட புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அவையெல்லாம் ஓரளவுக்கு செப்டம்பர் 14 அன்று உறுதியாகிவிடும். குறிப்பாக ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் பயனாளர்களையும் கூட ஃபேஸ்டைமில் இணைக்கும் வசதிகளும் அறிமுகமாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் பயனாளர்களுக்கு இந்த இயங்குதள அப்டேட் கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க , ஐபோன் 14 குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் இப்போதே கசிய தொடங்கிவிட்டன. குறிப்பாக ஐபோன் 14 புரோ மேக்ஸ் குறித்த புகைப்படங்கள் மற்றும் சில வசதிகள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி 6.7 இன்ச் திரையுடன் ,12 எம்.பி பிக்ஸலேட் வசதிகள் கொண்ட 48 எம்,பி முதன்மை கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8k வீடியோ எடுக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸைனை பொறுத்தவரை ஐபோன் 4 மாடல் போல காணப்படுகிறது. ஐபோன் 13 தேதி உறுதியானாலும் ஐபோன் 14 மாடலே இணைய டிரெண்டிங்கில் உள்ளது. ஐபோன் 14 அடுத்த வருடம் சந்தைப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.