Odysseus lander: Intuitive Machines எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்த ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ளது. கடைசி நிமிட நேவிகேஷன் சென்சார் செயலிழப்புக்கு மத்தியிலும் இந்த லேண்டர் திட்டமிட்டபடி தரையிறக்கப்பட்டுள்ளது.


நிலவின் மேற்பரப்பில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். அதோடு, 50 அண்டுகளுக்குப் பிறகு அதாவது 1972ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விண்கலம் நிலவில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும். இதுதொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உங்கள் ஆர்டர் நிலவுக்கு டெலிவரி செய்யப்பட்டது! Intuitive Machines ஆளில்லா விண்கலத்தின் லேண்டர் மாலை 6:23 மணிக்கு ET (2323 UTC) நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. இது நாசாவின் அறிவியலை நிலவின் மேற்பரப்பிற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் Artemis திட்டத்தின் கீழ் நிலவின் எதிர்கால மனித ஆய்வுக்கு நம்மை தயார்படுத்தும்” என தெரிவித்துள்ளது.


 






எங்கு தரையிறங்கியது?


ஹெக்சகன் வடிவிலான இந்த விண்கலம் ஒரு மணி நேரத்திற்கு 6,500 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாகச் சென்று, நிலவின் தென் துருவத்தில் இருந்து 186 மைல் தொலைவில் உள்ள மலாபெர்ட் ஏ என்ற பகுதியில் தரையிறங்கியுள்ளது. அதேநேரம், லேண்டரில் இருந்து உடனடி தரவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. லேண்டரில் உள்ள EAGLE CAM-ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்டரில் இருந்து தரவுகளை பெற இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.






 


நாசா சொல்வது என்ன?


1972 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது ஆராய்ச்சியாளர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 வெற்றிப் பயணத்தை, மீண்டும் மீண்டும் செய்வதற்கு தனியார் தொழில்துறைக்கு என்ன தேவை என்பதை நிரூபிக்கும் வகையில் சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க நிறுவனம் கடந்த மாதம் நடத்திய மூன்ஷாட் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தான் Intuitive Machines நிறுவனத்தின் ஒடிஸியஸ் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள நாசா மூத்த அதிகாரி ஜோயல் கிர்னஸ், "எதிர்காலத்தில் நமது விண்வெளி வீரர்களை அனுப்பவிருக்கும் திட்டத்திற்கு, நிலவின் சுற்றுச்சூழல் நிலைமைகளை உண்மையில் பார்க்க தென் துருவத்திற்கான முதல் பயணங்களில் இதுவும் ஒன்றாகும். அங்கே என்ன வகையான தூசி அல்லது அழுக்கு உள்ளது, அது எவ்வளவு சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கிறது, கதிர்வீச்சு சூழல் என்ன? இவை அனைத்தையும் மனித ஆய்வாளர்களை அனுப்புவதற்கு முன்பு தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.