பயனாளர்கள் தங்கள் ஃபீட் பகுதியில் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் புதிய சிறப்பம்சங்களாக ஆப்ஷன்களை வழங்கி அறிவித்துள்ளது. வழக்கமான, `ஹோம்’ பகுதி மட்டுமின்றி, இனி பயனாளர்கள் தங்கள் ஃபீட் பகுதிகளில் `ஃபேவரைட்ஸ்’, `ஃபாலோவிங்’ ஆகிய இரண்டு ஆப்ஷன்களைப் பெறலாம். 


பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக மிகச் சிறந்த அனுபவத்தைப் பெறவும், அவர்களுக்குப் பிடித்தவற்றைப் பார்வையிடுவதற்கான மிக விரைவான வழியைப் பெறவும் விரும்புவதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. `உங்கள் இன்ஸ்டாகிராம் ஃபீட் என்பது நீங்கள் பின்தொடரும் மனிதர்கள், பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் முதலானவற்றில் இருந்து கிடைக்கும் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் கலவையாகும். உங்களுக்குப் பிடித்தவற்றின் அடிப்ப்டையில், புதிதாக உங்கள் ஃபீட் பகுதியைக் கூடுதல் பரிந்துரைகளை மேற்கொள்ளும் விதமாக, இரண்டு ஆப்ஷன்கள் - ஃபேவரைட்ஸ், ஃபோலோவிங் ஆகியவை சேர்க்கப்பட்டு, இதன்மூலம் நீங்கள் பின்தொடரும் பக்கங்களில் அப்டேட்களை விரைவில் பெறலாம்’ என இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



ஃபேவரைட்ஸ் பகுதியில் பயனாளர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர், மிகவும் பிடித்த படைப்பாளிகள் முதலானவற்றில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அக்கவுண்ட்களின் சமீபத்திய பதிவுகளைப் பார்க்க முடியும். மேலும், உங்கள் ஹோம் பகுதியில் ஃபேவரைட்ஸ் பகுதியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பதிவுகள் அதிகமாக காண்பிக்கப்படும். உங்கள் ஃபேவரைட்ஸ் பட்டியலில் இடம்பெறும் அக்கவுண்ட்களின் பதிவுகள் உடனுக்குடன் காண்பிக்கப்படும். இந்தப் பட்டியலில் சுமார் 50 அக்கவுண்ட்கள் வரை இணைத்துக் கொள்ள முடியும்.. இந்தப் பட்டியலில் எப்போது வேண்டும் என்றாலும் மாற்றங்களை மேற்கொள்ளலாம். தாங்கள் சேர்க்கப்பட்டிருப்பதையோ, நீக்கப்பட்டிருப்பதையோ குறித்து யாருக்கும் நோட்டிஃபிகேஷன்கள் வழங்கப்பட்டாது. `ஸ்டார்’ ஐகான் மூலமாக ஃபேவரைட்ஸ் பகுதி சுட்டிக்காட்டப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. 


`ஃபாலோவிங்’ பகுதியில் பயனாளர்கள் பின்பற்றும் அக்கவுண்ட்களின் பதிவுகளைப் பார்வையிட முடியும். சமீபத்திய பதிவுகளைக் காட்டும் விதமாக, `ஃபேவரைட்ஸ்’, `ஃபாலோவிங்’ ஆகிய பகுதிகளை மாறி மாறி காட்டும் போது பயனாளர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 



உங்கள் ஹோம் ஃபீட் பகுதியை மாற்றி அமைப்பதற்கான வழிகள் இதோ... 


1. `இன்ஸ்டாகிராம்’ செயலியில் `ஹோம்’ பகுதிக்குச் செல்லவும். 
2.  மேல்பகுதியின் இடது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள `இன்ஸ்டாகிராம்’ பிராண்டிங்கை அழுத்தவும்.
3. இப்போது நீங்கள் தேர்ந்தெடுப்பதற்காக இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். `ஃபேவரைட்ஸ்’, `ஃபாலோவிங்’ ஆகிய இரண்டு ஆப்ஷன்களின் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 
4. இந்த இரண்டு ஆப்ஷன்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பயன்படுத்த தொடங்கலாம். 


இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மோசேரி இந்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம், மெட்டா ஆகிய நிறுவனங்களின் ப்ளாக் பதிவுகளில் வெளியிட்டுள்ளார்.