இணைய மோசடி:


இணைய வசதி காரணமாக மனிதனின் வாழ்வு எவ்வளவு மேம்பட்டு இருந்தாலும், அதனால் ஏற்படும் தீமைகளும் நன்மைக்கு நிகரான அளவிற்கு வளர்ந்துள்ளன. வங்கிக் கணக்கு முதற்கொண்டு தனிமனித தரவுகள் வரை அனைத்தும் ஒற்றை பாஸ்வேர்டுக்குள் அடங்கிப் போக, அவற்றை திருடுவதும் டிஜிட்டல் உலகில் மிகவும் எளிமையான காரியமாக மாறியுள்ளது. ஊடகங்களில் நாள்தோறும் காணும், இணைய மோசடி சம்பவங்களே இதற்கு ஆதாரங்களாக உள்ளன. இந்நிலையில், சைபர் கிரைம் தொடர்பாக, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தனியார் அமைப்பின் ஆய்வறிக்கை:


இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான குரூப் ஐபி நடத்திய ஆய்வின்படி, ஒருங்கிணைக்கப்பட்ட மோசடி பரப்புரை மூலம் கடவுச்சொற்களைத் திருடும் சைபர் குற்றவாளிகளின், சிண்டிகேட் சம்பந்தப்பட்ட உலகளாவிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 111 நாடுகளின் பட்டியலில்,  இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.


ரஷ்யாவின் பங்கு?


ஆய்வறிக்கையின் படி, 34 ரஷ்ய மொழி பேசும் சைபர் குற்றவாளிகள் டெலிகிராம் வழியாக தகவல் திருடும் மால்வேர்களை விநியோகித்து வருகின்றனர். அதன்மூலம் போலியான குறுஞ்செய்தி மற்றும் மெயில் ஆகியவற்றை அனுப்பி தகவல்கள் திருடப்படுகின்றன. இன்போ ஸ்டீலர் எனப்படும் இந்த யுக்தி கொண்டு பாஸ்வேர்ட்கள், கேமிங் கணக்குகள், மின்னஞ்சல் சேவைகள் மற்றும் சமூக ஊடகங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், கிரிப்டோ வாலட் தரவு மற்றும் பயனரின் செயல்பாட்டு தரவுகளை சேகரிக்கும் குக்கீ கோப்புகள் திருடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 11 கோடி குக்கீ கோப்புகள் திருடப்பட்டுள்ளன. திருடப்படும் தரவுகள் டார்க் வெப் சந்தைகளில் பணத்திற்காக விற்கப்படுகின்றன. இந்த தரவுகள் மூலம் பாஸ்வேர்ட் இன்றியே, ஒருவரின் சமூக வலைதள மற்றும் வங்கிக் கணக்குகளை பிறர் அணுக முடியும் என கூறப்படுகிறது. 


குறிவைக்கப்படும் பாஸ்வேர்டுகள்:


குக்கீ கோப்புகளைத் தவிர, சைபர் குற்றவாளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பயனர்களிடமிருந்து லட்சக்கணக்கான பாஸ்வேர்ட்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிதி உள்நுழைவு தரவுத் தொகுப்புகள் திருடப்பட்டுள்ளன. நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ளன.  திருடப்பட்ட தரவு மற்றும் அட்டை விவரங்களின் மதிப்பு டார்க் வெப் சந்தையில் சுமார் ரூ.48 கோடி  என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


முதல் மூன்று இடங்களில் இந்தியா:


இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக  சைபர் தாக்குதலால்  பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளது. உலகளவில், 2022ல் அடிக்கடி சைபர் தாக்குதலுக்கு உள்ளான முதல் ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ஜெர்மனி மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் உள்ளன. டெலிகிராம் குழுக்களின் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் கடைசி 10 மாதங்களில் திருட்டு மால்வேர் 19,249 சாதனங்களை பாதித்தது, அதே நேரத்தில் 2022 இன் முதல் ஏழு மாதங்களில் எண்ணிக்கை 53,988 ஆக அதிகரித்து இருந்துள்ளது.