நைஜீரிய அரசு அமெரிக்காவின் ட்விட்டர் தளத்தைத் தனது நாட்டில் முடக்கியுள்ளது. நைஜீரிய நாட்டு அதிபர் முகமது புகாரியின் கணக்கில் பதிவிட்ட ட்வீட் ஒன்று ட்விட்டர் விதிகளுக்குப் புறம்பானதாக இருப்பதாகச் சொல்லி அதனை நீக்கியது ட்விட்டர். இதையடுத்து,அந்தத் தளத்தையே தற்காலிகமாக முடக்கியது நைஜீரிய அரசு.


 இதையடுத்து ட்விட்டரைப் போன்ற இந்திய செயலியான ’கூ இந்தியா’ நைஜீரியச் சந்தையில் தனது விளம்பரத்தைத் தொடங்கியது. முதற்கட்டமாக அதன் இணை நிறுவனர் அப்ரமேய ராதாகிருஷ்ணன்,’கூ இந்தியா தற்போது நைஜீரியாவில் கிடைக்கப்பெறுகிறது. நாங்கள் நைஜீரிய மொழியையும் அதில் இணைக்கு யோசித்து வருகிறோம்.என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்டிருந்தார்.  






அவரது இந்தக் கேள்விக்கு பல்வேறு யோசனைகளைப் பயனாளர்கள் வழங்கினார்கள்.சிலர் நைஜீரிய அரசு அதிகாரிகள், உள்ளூர் கலைஞர்களுக்கு வெரிஃப்ட் பக்கங்கள் அளிப்பது பற்றி யோசனை அளித்தார்கள்.


ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் முன்னாள் மாணவரான அப்ரமேய ராதாகிருஷ்ணா கடந்த வருடம் பெங்களூருவில் தனது நண்பர் மயங்க்குடன் ’கூ’ சமூகவலைத்தளத்தைத் தொடங்கினார்.


பொது முதலீட்டில் உருவான ’கூ’ தளத்துக்கு இதுவரை $34 மில்லியன் தொகை சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை எத்தனைப் பயனாளர்கள் இந்த தளத்தில் இருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியவில்லை என்றாலும் அடுத்த இரண்டு வருடங்களில் 100 மில்லியன் பயனாளர்கள் என்பதே தங்கள் இலக்கு என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கூ தொடங்கப்பட்டதுமே மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் ட்விட்டருக்கு எதிராக இதனைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அதே சமயம் ஆளும் அரசுடன் ட்விட்டர் தளம் தொடர்ந்து முட்டல் மோதலில் இருந்து வரும் நிலையில் இதனை வாய்ப்பாகக் கொண்டு இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றான உள்ளூர் உற்பத்தியாக கூ  பாரதிய ஜனதாவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது.


ட்விட்டர் போல இல்லாமல் இந்திய அரசின் புதிய ஐ.டி. விதிகளை ஏற்றுக்கொள்வதாக கூ அறிவித்தது.இருந்தாலும் அது தொடர்ந்து பயனர் தனிப்பாதுகாப்பு குறித்த பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.


ட்விட்டர் தளம் சர்வதேச அளவில் பல்வேறு நாட்டு அரசுகளுடன் முட்டல் மோதலில் இருந்துவருகிறது.இந்த மோதல் அரசுக்கு ஆதரவான ’கூ’ போன்ற புதிய நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருக்கின்றன.




அண்மையில் நைஜீரிய அதிபர் புகாரியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியதிலிருந்து ட்விட்டர் அந்த நாட்டு அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்தது. இரண்டு நாட்கள் கழித்து நைஜீரிய தகவல் அமைச்சகம் ட்விட்டர் இணையதளம் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக அறிவித்தது. நைஜீரியாவில் அமைதியான சூழலுக்கு எதிராக அந்தத் தளம் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக இதற்காகக் காரணம் சொல்லப்பட்டது. நைஜீரிய வலதுசாரிகள் இந்த முடிவை வலுவாக எதிர்த்தன. ’எதிர்ப்பை ஒடுக்கவே இந்த நடவடிக்கை எனத் தெளிவாகத் தெரிகிறது’ என அந்த நாட்டு மனித உரிமைச் செயல்பாட்டு ஆராய்ச்சியாளர் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார்.


‘சர்வாதிகார ஆட்சியில்தான் இதுபோன்ற ஒடுக்குமுறைகள் எழும்’ எனப் பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து கூறினார்கள்.


ஏற்கெனவே ட்விட்டர் சீனா, துருக்கி, மியான்மரில் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.