உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி யாரேனும் செல்போன் சிம் கார்டு வாங்கியதாக உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? அதனை நீங்களே கண்டுபிடிக்க சில எளிய நடைமுறைகள் இருக்கின்றன. 


மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்தின் கீழ வரும் டாட் (DOT Department of Telecommunications) இதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 


இந்த வழிமுறைகள் அதன் இணையப்பக்கமான tafcop.dgtelecom.gov.in பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனைப் பயனப்டுத்தி உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி யாரேனும் செல்போன் சிம் கார்டு வாங்கியிருக்கிறார்களா என்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம்.


சமூக விரோதிகள் தங்களின் சதித் திட்டங்களுக்கு பல நேரங்களில் போலியான முகவரி உள்ளிட்ட தகவல்களைப் பயன்படுத்தி செல்போன் வாங்குவது நடக்கின்றது. இது தொடர்பாக பல நேரங்களில் சைபர் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதனைத் தடுக்கவே தொலைதொடர்பு துறை, TAF COP (Telecom Analytic for Fraud Management and Consumer Protection) இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.


இந்த இணையதளத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்கள் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளைக் கண்டறியலாம். ஒருவேளை அதிலுள்ள மொபைல் இணைப்பு தாமே வாங்கவில்லை என்றால் அது குறித்து ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.




சரி வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்:


* முதலில் TAF COPப்பின்  tafcop.dgtelecom.gov.in பக்கத்திற்கு செல்லவும்
* அதில் உங்களின் மொபைல் எண்ணைப் பதிவிடவும்
* பின்னர் ஓடிபி எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்டு கோரவும்
* கிடைக்கப்பெற்ற ஓடிபியைப் பதிவிடவும்
* அதன் பின்னர் உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டு எண்களையும் நீங்கள் பெறலாம்.


இந்த வசதி இப்போதைக்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மட்டும்தான் கிடைக்கப் பெறுகிறது. இருப்பினும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் சிலர் இந்த வசதி தங்கள் மாநிலங்களிலும் கிடைப்பதாகவும் அதன் மூலம் தாங்கள் பயன்பெற்றுள்ளதாகவும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் தகவல் மொபை சிம்முக்காக திருடப்பட்டிருக்கிறதா என்பதை அறிவதோடு அங்கேயே புகார் தெரிவிக்கும் வசதியும் பின்னர் புகார் மீதான நடவடிக்கையை ட்ராக் செய்யும் வசதியும் மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.


இணையம் விரல் நுணியில் வந்தது எவ்வளவு வசதியானது என்பதற்கு இதுவும் ஒரு நற்சான்று. இருப்பினும், ஆதார் எண் போன்றவற்றை எப்போதும் யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. ஆனால், தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஒரு வசனம் வரும், ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர் பேசும்போது, "இங்கே எங்களிடம் ஜெராக்ஸ் எடுக்க வருபவர்கள் கொடுக்கும் ஆதார், பான், கல்விச் சான்றிதழ் என எல்லாவற்றிலும் இன்னொரு பிரதியை நாங்கள் எடுத்துவைத்துக்கொள்வோம். அதை கால் சென்டர்களிடம் விற்றுவிடுவோம். டேட்டாவுக்கு நல்ல காசு சார்" என்பார். இணைய உலகில் நாம் எவ்வளவு பத்திரமாக இருந்தாலும் கூட நம்மைப் பற்றிய தகவல்கள் கசிவதை எந்த ஒரு இரும்புத்திரையும் தடுத்துவிட முடியாது.