அமெரிக்காவில் 50 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு உரிமை மீதான சட்டம் சமீபத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையையும் விவாதத்தையும்  கிளப்பிய நிலையில் , பிரபல கூகுள் நிறுவனம் கருக்கலைப்பு மருத்துவமனைகளுக்கு செல்லும் தகவல்கள் இனி  லொகேஷன் ஹிஸ்டரியில் இருந்து நீக்கப்படும் என அறிவித்துள்ளது.


கூகுள் ஆதரவு :


உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ள கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக உலகம் முழுவது கண்டன முழக்கங்கள் வலுத்து வரும் சூழலில் பிரபல கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு ஆதரவாக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி கருக்கலைப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு செல்லும்  பெண்களின் லொக்கேஷன் தரவுகள் ஹிஸ்ட்ரியில் இருந்து நீக்கப்படும் என்றும், அந்த தகவல்கள் சேமிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று (வெள்ளிக்கிழமை)  கூகுள் செய்தி தளத்தில் மூத்த அதிகாரி ஜென் ஃபிட்ஸ்பேட்ரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.


கருக்கலைப்பு மையங்கள் தவிர  வெயிட் லாஸ் கிளினிக், போதை மறுவாழ்வு மையம், ஃபெர்டிலிட்டி மையம் போன்றவற்றின் லொக்கேஷன் தரவுகளும் இனி ஹிஸ்ட்ரியில் சேமிக்கப்படாது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் செயல் எனவும் தெரிவித்துள்ளது. இது வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




எப்படி இது சாத்தியம் ?


கூகுள் தற்போது அறிவித்துள்ள இந்த புதிய வசதியான எப்படி சாத்தியம் ? பயனாளர்கள் கருக்கலைப்பு மையங்களுக்கு செல்கிறார்கள் என்பதை எப்படி அறிந்துக்கொள்வீர்கள்? தகவல்கள் எல்லாம் முழுமையாக அழிக்கப்படுமா? என பிரபல ராயட்டர்ஸ் நிறுவனம் கூகுள் செய்தி தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது




கருக்கலைப்பு சட்டம்  விவரம்:


அமெரிக்காவில் 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு பெண் 22 வாரங்கள் முதல் 26 வாரங்கள் வரையிலான கர்ப்பத்தை அவர் விரும்பினால் கலைத்துக்கொள்ளலாம். ஆனால் இன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தற்போது இதனை நீக்கியுள்ளதால் இனி பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளைப் பறிக்கும். இனிமேல் கருக்கலைப்பு விதிகள் ஒரே சட்டமாக இல்லாமல் மாகாணங்களுக்கு ஏற்ப மாறுபடும். அமெரிக்க மாகாணங்களில் பாதிக்கும் மேலான மாகாணங்கள் கருக்கலைப்பு ரத்து சட்டத்தை ஆதரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக அமெரிக்காவின் 13 மாகாணங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகிவிட்டன எனத் தெரிகிறது. அமெரிக்காவில் கருத்தரிக்கும் வயதில் 30 மில்லியனுக்கு மேல் பெண்கள் உள்ளனர். அவர்களில் பலரும் இனி கருக்கலைப்பை அவ்வளவு எளிதாக செய்துகொள்ள முடியாது.


இந்த தீர்ப்புக்கு அமெரிக்க மாகாணங்கள் வரவேற்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதற்கு முன்னதாக இது போன்ற பல தீர்ப்புகளை மாகாணங்கள் விதித்து அதனை திரும்பப்பெற்றுக்கொண்ட வரலாறும் உள்ளது.