Google's Chrome  VPN: விபிஎன் செயலி இல்லாமலேயே IP முகவரியை மறைக்கும் புதிய அம்சத்தை கூகுள் க்ரோம் வழங்க உள்ளது.


விபிஎன் செயலி:


இணையத்தில் க்ரோம் போன்ற தேடுதளங்களில் ஒருவர் என்ன மாதிரியான விவரங்களை தேடுகிறார் என்பதை, அவரது IP முகவரியை கொண்டு அறியலாம். ஆனால், விபிஎன் செயலியை பயன்படுத்தி அதனை மறைக்க முடியும். இந்த செயலிகள் உண்மையான IP முகவரியை பயன்படுத்தி, போலி IP முகவரியை பயன்படுத்த பயனாளர்களுக்கு வழிவகை செய்கிறது. பெரும்பாலும் தடை செய்யப்பட்ட வலைதளங்களை அணுகவே இந்த போலி IP முகவரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதற்காக தனியாக ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் தனியாக விபிஎன் செயலி என எதுவுமின்றி, க்ரோம் செயலியிலேயே IP முகவரியை மறைக்கும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வர உள்ளது. 


கூகுளின் புதிய திட்டம்:


அதன்படி, கூகுள் நிறுவனம் தற்போது தனது க்ரோம் செயலியில் எந்தவொரு விபிஎன் செயலியும் இன்றி IP முகவரியை மறைக்கும் வசதியை கொண்டு வர உள்ளது. முதற்கட்டமாக  தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களில் மட்டும், போலி ஐபி முகவரிய பயன்படுத்தும் அம்சத்தை  க்ரோம் அனுமதிக்க உள்ளது. இதன் மூலம், க்ரோம் பயனாளர்களின் இணையதள செயல்பாட்டை தனிநபர்கள் கண்காணிப்பது மற்றும் தரவுகளை சேகரிப்பது போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் நம்புகிறது.


கூகுள் நிறுவனம் சொல்வது என்ன?


புதிய அம்சம் தொடர்பாக பேசியுள்ள கூகுளின் மூத்த மென்பொருள் பொறியாளர் ப்ரியானா கோல்ட்ஸ்டைன், போலி ஐபி முகவரியை பயன்படுத்த பயனாளர்களை அனுமதிப்பது தொடர்பான ஆரம்பகட்ட சோதனைக்கு கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது. முதற்கட்டமாக Google.com, Gmail மற்றும் Google விளம்பரச் சேவைகள் உள்ளிட்ட கூகுளுக்கு சொந்தமான டொமைன்களில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. அனைத்து இணையதள அணுகலில் இருந்தும் பயனாளர்களின் ஐபி முகவரியை மறைப்பது இதன் நோக்கம் அல்ல எனவும், பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கக் கூடிய இணையதளங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான ஐபி முகவரியை வழங்குவதே இலக்கு” என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சோதனைகள் விரைவில் அமெரிக்காவில் தொடங்க உள்ளது.


என்ன பாதிப்பு நிகழலாம்?


IP முகவரிகளை நம்பியிருக்கும் முறையான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால் கூகுள் இணைய சேவைகள் மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களின் இணைய சேவைக்கும் போலி ஐபி முகவரி அணுகல் சேவை விரிவு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறை சஃபாரியில் கிடைக்கும் ஆப்பிளின் iCloud பிரைவேட் ரிலே அம்சத்துடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இந்த சேவையின் மூலம் பயனாளரின் இண்டர்நெட் ஸ்பீட் குறைய வாய்ப்புள்ளது. 


கூகுளின் பாதுகாப்பு அம்சமா?


பயனாளர்களின் தனியுரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கூகுள் மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. இதன் மூலம் தேர்ட் பார்ட்டி குக்கீஸ்களின் இடையூறுகளை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.  2024க்குள் குக்கீஸ்களை முடக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பயனாளர்களுக்கு போலி ஐபி முகவரி அணுகலை வழங்குவதன் மூலம், அவர்கள் பற்றிய தரவுகளை சேகரிக்க முயலும் தேர்ட் பார்ட்டி சைட்களுக்கான வாய்ப்புகள் குறைக்க முடியும் என கூகுள் நம்பிக்கை கொண்டுள்ளது.