ஒருவரிடம் தகவலை பரிமாறுவதற்கு மட்டுமே செல்போன் என்ற நிலை இருந்தவரை பெரிய பிரச்னை இல்லை. ஆனால் செல்போனில் வங்கி பரிவர்த்தனைகள், இண்டர்நெட், கேமரா, வீடியோ, சோஷியல் மீடியா என செல்போன் பல பயன்பாட்டுக்கு கீழ் வந்த பிறகு ஏகப்பட்ட சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகளும், போன் பே, கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை செயலிகளும் ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகிவிட்டது. பயனர்கள் டிஜிட்டலை பயன்படுத்துவது போல கொள்ளையர்களும் இன்று டிஜிட்டலில் உலா வரத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் உலகில் மோசடிக்காரர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு தலை சுற்றலாம்?
உங்க ஏடிஎம் கார்டு மேலே உள்ள நம்பரை சொல்லுங்கள் என போன் செய்வதை மட்டுமே நாம் மோசடிக் கும்பல் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கே தெரியாமல் நம் செல்போனுக்குள் நுழைந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர் இந்த மோசடி பேர்வழிகள்.
ரோக் செயலிகள். இதுதான் மோசடிக்காரர்களின் கண்டுபிடிப்பு. மிகவும் பிரபலமான ஏதாவது ஒரு ஆப் போலவே மிகச் சரியாக உருவாக்கப்படும் இந்த ரோக் செயலிகள் கொஞ்சம் அசந்தால் உங்கள் செல்போனுக்குள் ஒரு செயலியாகவே வந்துவிடும். அதன் பின் உங்கள் செல்போனில் உள்ள வங்கித் தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்கள் எல்லாம் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் மட்டுமே.
இது சாத்தியமா? என்று கூட உங்களுக்கு தோன்றலாம். இதற்கு எதிராகத்தான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது கூகுள் போன்ற நிறுவனங்களும். ஆம், கூகுளில் இருந்து எடுக்கப்படும் ஏதோ ஒரு ரேண்டமான செயலியில் இருந்து மட்டும் இந்த மோசடி ஆப்கள் நம் செல்போனுக்கு வருவதில்லை. நாம் நம்பி டவுன்லோட் செய்யும் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் போன்ற இடங்களிலும் வைரஸாக உள் நுழைந்து நம்மை ஏமாற்றிவிடுகின்றனவாம் இந்த செயலிகள். நாம் டவுன்லோட் செய்ய விரும்பும் செயலி போலவே, அதே பெயரில் அதே லோகோவில் இந்த மோசடி ஆப்கள் இருப்பதால் பயனர்கள் ஏமாந்து விடுகின்றனர். அதுவும் கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பிக்கையான இடங்களில் கிடைப்பதால் சந்தேகத்துக்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது என்பது தான் பெரும் சிக்கல்.
டிஜிட்டல் திருடர்களிடையே இந்த ரோக் ஆப் செயல்பாடுகள் மிக வேகமாக வளர்ந்து வருவது தான் அதிர்ச்சிகரமான விஷயம். வங்கியின் டிஜிட்டல் ஆப் என நீங்கள் டவுன்லோட் செய்யும் ஆப் திருடர்களின் வலையாகவும் இருக்கலாம் என்பதே இந்த அச்சத்துக்கு காரணம். வங்கி விஷயங்கள் மட்டுமில்லாமல், கேலரி, கேமரா, காண்டக்ட் லிஸ்ட் என அனைத்துமே யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க இந்த ஆப்கள் பயன்படுத்தப்படலாம்.
கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற செயலிகளின் கூடாரமே இந்த ரோக் ஆப்களால் ஆடிப்போய் உள்ளது. தொடர்ந்து கண்காணிப்பதால் பல மோசடி ஆப்கள் தொடர்ந்து நீக்கப்பட்டும் வருகின்றன. ஆனாலும் இது தொடர் சிக்கலாகவே இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூகுள் ப்ளே ஸ்டோர் தடைசெய்வதற்கு முன்பே பயனர்கள் பலர் செயலிகளை டவுன்லோட் செய்துவிடுகின்றனர். இதனால் சிக்கல் ஏற்படுகிறது. எனவே செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் உள்ள செயலிகளை தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கின்றன செயலி நிறுவனங்கள்.
என்ன செய்யலாம்?
மிக அவசியமான செயலிகளை தவிர மற்ற செயலிகளை டவுன்லோட் செய்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோரிலேயே போலி என்ற நிலை இருப்பதால், நேரடியாக கூகுளில் சென்று ஆப்களை டவுன்லோடு செய்வது இன்னும் மோசமான விளைவை உண்டாக்கும்.
போலி செயலிகளை டவுன்லோட் செய்தால் வழக்கத்துக்கு மாறாக உங்கள் செல்போன் பேட்டரி வேகமாக குறையும். அப்படி ஏதேனும் தோன்றினால் நீங்கள் புதிதான டவுன்லோட் செய்த ஆப்கள் மீது கவனம் செலுத்துங்கள். தேவை என்றால், டெலிட் செய்துவிடலாம்.
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து ஆப்ஸைப் பதிவிறக்குவதற்கு முன், அங்கு வழங்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகச் சரிபார்க்கவும்.
டவுன்லோட் செய்யும் போது கண்ணை மூடிக்கொண்டு Agree கொடுக்காமல், தேவையில்லாதவற்றை தவிர்க்கலாம்
முடிந்தவரை தேவையான ஏதாவது ஒரு வங்கி கணக்கை மட்டுமே செல்போனில் நிர்வகிக்கலாம். அதிக தொகை இருக்கும் வேறு ஒரு வங்கிக் கணக்கை செல்போனுடன் இணைக்காமல் பயன்படுத்தலாம்.