கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூகுள் நிறுவனம் `பிக்ஸல் 6’. `பிக்ஸல் 6 ப்ரோ’ ஆகிய புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை வெளியிட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் கூகுள் நிறுவனம் புதிதாக கூகுள் பிக்ஸல் 6A என்ற மாடலை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `பிக்ஸல் 6’ சீரிஸ் மாடல்களில் புதிதாக மற்றொரு மாடலை வரும் மே மாதத்தில் கூகுள் நிறுவனம் சேர்க்கும் எனக் கூறப்பட்டு வருகிறது.


மேலும், கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட்ஃபோனில் புதிய மாடல் வெளியிடுவது குறித்த தகவல்களும் தற்போது கூகுள் நிறுவனத்தின் தரப்பில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் போது, கூகுள் நிறுவனம் தங்கள் வருடாந்திர டெவலபர் சந்திப்பை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், கூகுள் நிறுவனம் புதிதாக `கூகுள் பிக்ஸல் 6A' மாடலை வெளியிடும் என எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்த மாடல் ஸ்மார்ட்ஃபோனைக் குறித்த எந்தத் தகவல்களையும் கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதும், அதுகுறித்த எதிர்பார்ப்புகளும் வதந்திகளும் இணையத்தில் பரவி வருகின்றன. சில தகவல்களின்படி, கூகுள் பிக்ஸல் 6A மாடலும் அதன் முந்தைய `பிக்ஸல் 6’ சீரிஸ் மாடல்களைப் போல தோற்றம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



கூகுள் பிக்ஸல் 6A மாடலில் 6.2 இன்ச் அளவிலான OLED டிஸ்ப்ளேவுடன் நடுவில் முன்பக்க கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், டிஸ்ப்ளேவின் கீழ் கைரேகையைச் சோதிக்கும் சிறப்பம்சமும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. கூகுள் பிக்ஸல் 6, பிக்ஸல் 6 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்ஃபோன் மாடல்களைப் போலவே இந்த மாடலிலும் Google Tensor GS101 பிராசஸர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இந்த மாடலின் முன்னணி கேமராவில் 12.1 மெகாபிக்ஸல் அளவிலான சோனி IMX363 சென்சார் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. சோனி IMX363 சென்சார் என்பது கூகுள் பிக்ஸல் மாடல் ஸ்மார்ட்ஃபோன்களின் பிக்ஸல் 3 முதல் பிக்ஸல் 5A வரையிலான மாடல்களில் இருப்பவை. மேலும் இந்த மாடலில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன் பக்கத்தில் உள்ள 8 மெகாபிக்ஸல் கேமரா மூலமாக செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால் பேசுவதற்கும் பயன்படுத்தலாம். 



கூகுள் பிக்ஸல் 6 சீரிஸ் மாடல்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்கப்பட்டாலும், இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படவில்லை. எனவே கூகுள் பிக்ஸல் 6A மாடலும் இந்தியாவில் வெளியாகுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.