அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் சமீபத்தில் ஃபின்டெக் ஸ்டார்ட் அப் சேதுவுடன்  இணைந்தது. கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே(Google pay) சேவை மூலமாக இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வைப்பு நிதி பயன்பாட்டை கொண்டுவர இருக்கிறது. கூகுள் பே முதலில் ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி மூலமாக பிக்சர் டெபாசிட்களை ஒரு வருடம் வழங்கும் என கூறப்படுகிறது.


தொடர்ச்சியா உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி மற்றும் ஏயூ சிறிய நிதி வங்கி ஆகியவை விரைவில் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஓராண்டு வைப்பு நிதிக்கு(Fixed Deposit) அதிகபட்சமாக 6.35% வட்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈக்விட்டாஸ் சிறு நிதி வங்கியில் இந்த கணக்கு தொடங்கப்படும், சமயத்தில் வங்கியில் கணக்கு இல்லாத நபர்கள் கூகுள் பே மூலமாக கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.



பயனர்கள் ஆதார் கார்டு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் ஒருமுறை கடவுச்சொல் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஃபின்டெக் ஸ்டார்ட்அப் சேது ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் ஸ்டார்ட் அப் ஆகும். நிறுவனம் முன்னதாகவே எஃப்டி-களுக்கு பல்வேறு தளங்களில் சோதனை பதிப்பை உருவாக்கி இருக்கிறது.


இதில் 7 - 29 நாட்கள, 30 - 45 நாட்கள், 46 - 90 நாட்கள், 91 - 180 நாட்கள், 181 - 364 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வரையிலான கால இடைவெளிகளில் இந்த திட்டங்கள் அடங்கும். இதன் குறுகிய வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து 6.35 சதவீதம் வரை இருக்கிறது. கூகுள் இந்தியாவில் இந்த வளர்ச்சியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மற்றும் கூகுள் பே-ல் புதிய அம்சத்திற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியையும் குறிப்பிடவில்லை.



இந்த திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையில் இணையலாம். ஈக்விட்டாஸ் சிறு நிதி வங்கியின் மூலம் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம் அதில் கணக்கு இல்லாதவர்கள் கூகுள் பே மூலம் கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டமானது எந்தெந்த முறையில் செயல்படும் எனவும் இது இந்திய பயனர்களிடையே எந்தளவிற்கு வரவேற்பு பெறும் என்பது குறித்தும் அம்சம் வெளியான பிறகே அறிந்து கொள்ள முடியும்.


டிஜிட்டல் இந்தியாவின் செயல்பாட்டின் பிரதான ஒன்று டிஜிட்டல் பேமெண்ட். டிஜிட்டல் பேமெண்ட் மேற்கொள்வதற்கு பல்வேறு பயன்பாடுகள் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட் என்பது சிறிய தொழில் முதல் பெரிய தொழில்வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.


குறிப்பாக கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் டிஜிட்டல் செயல்முறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைன் ஆர்டரில் கிடைக்கிறது. மேலும் சமூகஇடைவெளியை கடை பிடிக்கும் வகையில் நேரில் வாங்கும் பொருட்களுக்கும் கடையில் க்யூஆர் கோட் சோதனை முறையிலும், ஏடிஎம் கார்ட், கூகுள் பே, போன் பே மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.