ஆப்பிள் மாடல்களின் iOS சிஸ்டத்திற்கான கூகுள் ஃபிட் செயலியில் புதிதாகப் பல்வேறு அப்டேட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த செயலியின் மூலம் தொடர்ந்து இதயத் துடிப்பைக் கண்காணிப்பதோடு, இதற்காக ஐஃபோன் கேமராவையும் பயன்படுத்துகிறது. பின்பக்க கேமராவின் லென்ஸ் மீது விரல் வைத்து, அதனை லேசாக அழுத்துவதன் மூலம் இந்த செயலி இதயத் துடிப்பைக் கண்காணித்து, விவரங்கள் அளிக்கிறது. மேலும் இதனைச் செயல்படுத்த இணைய வசதியும் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. கூகுள் ஃபிட் செயலியின் இதயம், மூச்சு முதலான அம்சங்கள் கூகுள் பிக்சல் மாடல்களுக்கு மட்டுமே முதலில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருந்தன.  


ஆப்பிள் ஐஃபோன்களில் இயங்கும் கூகுள் ஃபிட் செயலியில் இதயம், மூச்சு முதலானவற்றைக் கண்காணிக்கும் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்படும் எனச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களின்படி, பயனாளர்கள் தங்கள் ஐஃபோனின் பின்பக்கத்தில் உள்ள கேமராவின் மீது விரலை வைத்து, ஃப்ளாஷ் லைட்டை ஆன் செய்ய வேண்டும் எனவும், அதன்மூலம் கூகுள் ஃபிட் செயலி இதயத் துடிப்பைக் கணிக்கிறது. மேலும் ஃப்ளாஷ் ஆன் செய்வது துல்லியமான விவரங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது. 



மேலும், இந்தச் சிறப்பம்சங்களைப் பயன்படுத்துவதற்காகத் தொடர்ந்து செயல்படும் இணைய வசதி கூட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்கள் விரலைப் பின்பக்க கேமராவின் மீது வைக்கும் போது, சுமார் 30 நொடிகளில் பயனாளர்களின் இதயத் துடிப்பைக் கணிக்கிறது. 30 நொடிகளுக்குப் பிறகு, பயனாளர்கள் தங்கள் விரலைக் கேமராவில் இருந்து நீக்கியதும், இதய வேகம், நொடிக்கு எத்தனை துடிப்புகள் முதலான விவரங்கள் காட்டப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைப் பதிவு செய்து கொண்டு எதிர்காலத்தில் பயன்படுத்தலாம்; இல்லையெனில் அப்போது மட்டும் பார்த்துக் கொள்ளலாம். இரு வசதிகளும் இதில் உண்டு. 


ஆப்பிள் ஐஃபோன்களுக்கான கூகுள் ஃபிட் செயலியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சத்தின் படி, பயனாளர்கள் தினமும் எத்தனை முறை மூச்சு விடுகிறார்கள் என்பதையும் கண்காணிக்க முடிகிறது. இதற்காக கேமராவின் முன்பக்கத்தின் கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பயனாளர்கள் தங்கள் ஐஃபோனைச் சீரான தளத்தில் தலையும், மேல்பக்க உடலும் தெரியுமாறு, இடையூறு ஏதுமின்றி காட்டும் போது, அதில் கூறப்படும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போது முகம், மேல்பக்க உடலும் நகர்வதன் அடிப்படையில் இந்தச் செயலி மூச்சு எண்ணிக்கையைக் கணிக்கிறது. 



இந்தச் சிறப்பம்சங்கள் கூகுள் நிறுவனத்தால் ஆண்ட்ராய்ட் மாடல்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருந்தன. மேலும் இந்த இதய, மூச்சு சிறப்பம்சங்கள் முதலில் பிக்சல் மாடலுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருந்தன. எனினும் தற்போது ஐஃபோன் மாடலுக்கான சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்த அப்டேட் இன்னும் வெளியிடப்படவில்லை. கூகுள் நிறுவனம் இந்த சிறப்பம்சங்கள் அதிகம் பயன்பட்டாலும், இதனை உடல்நலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம் எனவும், மருத்துவப் பிரச்னைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.