Google Doodle: சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று தரையிறக்கப்பட்டது. இந்நிகழ்வை டூடுல் போட்டு  சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.


தரையிறங்கிய சந்திரயான் -3


சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கியது. இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. பிரக்யான் ரோவரின் வேகம் அதன் செயல்பாட்டை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக மெதுவாக செல்லும்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சுமார் 2 மணி நேரத்தில் பிரக்யான் ரோவர் தனது பணியை தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரோ அறிவித்திருந்தது. இதன்படி, தற்போது பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து தனது பணியை தொடங்கியுள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் சாய்வு தளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.


கண்காணிப்பு:


இந்த சாய்வு தளம் மூலமாக ரோவர் தரையிறக்கப்பட்டது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம்,  கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.


டூடுல் வெளியிட்ட கூகுள்:






இந்த வெற்றியை உலகமே கொண்டாடி வரும் நிலையில், டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி, சந்திரயான் 3 மிஷனை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். இது ஜிஃப் (GIF) வடிவத்தில் இயங்குகிறது. அதில் கண்களை மூடிக் கொண்டு நிலவை சுற்று சந்திரயான வலம் வருகிறது. தொடர்ந்து லேண்டர் அதில் தரையிறகி, அதிலிருந்து ரோவர் பிரிவது போல இந்த டூடுல் ஜிஃப் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கூகுள் டூடுல் பக்கத்தில் சந்திரயான் 3 மிஷனின் முழுப் பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சந்திரயான் 3 வெற்றிக்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.