ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்காக செயலிகளை உருவாக்கும் டெவலப்பர்களுடனான சட்டப் பிரச்சினையில் கூகுள் நிறுவனம் 90 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீடாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஆண்ட்ராய்ட் ஆப் டெவலப்பர்கள், கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும், செயலிகள் மூலமாக வரும் வருமானத்தை கூகுள் ப்ளே பில்லிங் சிஸ்டம் மூலமாக சேவைக் கட்டணம் என 30 சதவிகிதத்தைப் பிடித்தம் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2016 முதல் 2021 வரை, சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் குறைவாக வருடாந்திர வருவாய் ஈட்டியிருக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு 90 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். இந்தப் பதிவில், `கூகுள் ப்ளே மூலமாக வருவாய் ஈட்டி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலான டெவலப்பர்கள் இதன்மூலமாக பணம் பெற முடியும்’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கூகுள் நிறுவனம் டெவலப்பர்கள் ஈட்டும் வருவாயில் முதல் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை 15 சதவிகிதம் கட்டணம் பெறவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைக் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது கூகுள் நிறுவனம்.
கூகுள் நிறுவனம் முன்வைத்துள்ள இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் ஒன்றிய நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மனுதாரர்களின் சார்பாக ஆஜரான ஹேகன்ஸ் பெமன் சோபோல் ஷபிரோ சட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகுள் நிறுவனத்தின் 90 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிக்கு சுமார் 48 ஆயிரம் ஆப் டெவலப்பர்கள் தகுதி பெற்றிருப்பதாகவும், குறைந்தபட்சமாக 250 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, இதே போன்ற வழக்கில் ஆப்பிள் நிறுவனம் ஆப் ஸ்டோரில் சிறிய டெவலப்பர்களுக்கு அளித்திருந்த கட்டுப்பாடுகள் தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை டெவலப்பர்களுக்கு அளிக்க முன்வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்கள் இல்லாமல் செயலிகளை டவுன்லோட் செய்யும் வசதியைக் கொண்டு வர சட்டம் இயற்றவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஏற்கனவே இதற்கு அனுமதித்திருப்பதாகக் கூறியுள்ளது. இதன்மூலமாக, கூகுள், ஆப்பிள் ஆகியவற்றிற்குப் பணம் செல்வது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்