கெலியோஸ் மொபிலிட்டி நிறுவனம் டெல்லி ஐஐடி-யின் உதவியோடு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கெலியோஸ் ஹோப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம் டெலிவரி மற்றும் சொந்தப்பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளதாக கெலியோஸ் மொபிலிட்டி நிறுவனம் தெரிவிக்க, இந்திய சந்தையில் சுமார் 47,000 ரூபாய்க்கு இந்த எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வாகனத்தின் டிசைனை பொறுத்தவரை Apron-Mounted முகப்புவிளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தட்டையான இருக்கையும், உயர்த்தப்பட்ட கைபிடிகளும் இதில் உள்ளது. மேலும் வாகனத்தில் பொருட்களை வைக்கவும், அடுக்கவும் பலதரப்பட்ட மவுண்டிங் ஆப்சன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. வாகனத்தை இயக்கும்போது பேட்டரி தீர்ந்துவிட்டால் பெடல் செய்து மிதிவண்டியை போல இந்த வாகனத்தை இயக்கலாம்.
கெலியோஸ் ஹோப் பைக்கில் 250W திறன்கொண்ட BLDC ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 18Ah, 24Ah, மற்றும் 30Ah ஆகிய மூன்று வெவ்வேறு திறன்கொண்ட பேட்டரிக்களுடன் வெளியாகியுள்ள ஹோப் பைக், பேட்டரிக்கு ஏற்ப (ஒரு முறை சார்ஜ் செய்தால்) 25 முதல் 75 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்கொண்டது. இந்த வாகனத்தை சார்ஜ் செய்ய குறைந்தது 3ல் இருந்து 4 மணிநேரம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.