ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் பிரபல தொழிலதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமமன எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாங்கினார். அப்போது முதல் அவர் ட்விட்டர் தளத்தில் போடும் பதிவுகள் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றன. அத்துடன் அவர் ட்விட்டர் நிறுவனத்தை எடுத்த பிறகு சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் எலான் மஸ்க் ஃபைனாசியல் டைம்ஸ் தளம் நடத்திய ஒரு விழாவில் பேசியுள்ளார். அதில், “அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரெம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது மிகவும் முட்டாள் தனமான முடிவு. அது தேவையற்ற முடிவுகளில் ஒன்று. என்னை பொறுத்தவரை ஒரு ட்விட்டர் கணக்கு போலியாக இருந்தால் அல்லது ஒரு பாட்டாக இருந்தால் அவற்றை முழுமையாக முடக்கம் செய்யலாம். மற்ற கணக்குகளை முழுமையாக முடக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் வன்முறையை தூண்டும் வகையில் ட்ரெம்பின் பதிவுகள் இருந்ததாக கூறி அவருடைய கணக்கு முடக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் தனக்கு ட்விட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லை என்று கூறினார். அவர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் என்ற பக்கத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே ட்விட்டர் பக்கத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக அனைவருக்கும் தங்களுடைய கருத்துகளை சொல்ல உரிமை உண்டு என்று கூறி இந்த தடையை நீக்குவார் என்று கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிந்துள்ளன. நேற்று மட்டும் பங்குசந்தையில் ட்விட்டர் பங்குகளின் விலை சுமார் 1.5% குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளின் விலை சற்று குறையும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்