ஜூன் 3 முதல் தனது சமூக ஊடக தளத்திலிருந்து ஆடியோ தயாரிப்புகளை அகற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், பாட்காஸ்ட் வணிகத்திற்கான தனது ஆதரவை நிறுத்த Facebook முடிவு செய்துள்ளது. Bloomberg வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Meta நிறுவனத்திற்கு சொந்தமான சமூக ஊடக ஆப் பேஸ்புக், இந்த வாரம் முதல் பாட்காஸ்ட்களைச் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தப்போகிறது என்று தெரிய வந்துள்ளது. நிறுவனம் தனது பங்கீட்டாளர்களுக்கு இது தொடர்பான செய்தியையும் அனுப்பியுள்ளது. பேஸ்புக் அதன் 'ஆடியோ ஹப்' மற்றும் அதன் குறுகிய வடிவ ஆடியோ தயாரிப்பான 'சவுண்ட்பைட்ஸ்' ஆகிய இரண்டையும் நிறுத்தப் போகிறது. ஏப்ரல் 2021 சமயத்தில், பாட்காஸ்டிங் மற்றும் ஆடியோ தயாரிப்புகள் சந்தையில் டிரெண்டிங்கில் இருக்கும் போது, Facebook அதன் தளத்திற்கு பல ஆடியோ முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. அது எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடையே சென்று சேராத காரணத்தால் பெரிய லாபம் ஒன்றும் இல்லாமல் தான் இருந்து வந்தது. தற்போது அதன் ஆடியோ தயாரிப்புகளில் நிறுவனத்தின் ஆர்வம் குறைந்துவிட்டதாக கடந்த மாத அறிக்கை கூறியது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு மெயிலை பகிர்ந்துள்ளார், அதில், "நாங்கள் வழங்கிவரும் சேவைகளை நாங்கள் தொடர்ந்து ரிவ்யூவ் செய்து வருகிறோம், எனவே மிகவும் அர்த்தமுள்ள, பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தும் விஷயங்களில் மட்டுமே நிறுவனத்தால் கவனம் செலுத்த முடியும். எனவே கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆடியோ தயாரிப்பு அம்சங்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதாக முடிவு செய்துள்ளோம்." என்று கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், 'Soundbites' மற்றும் 'Audiohub' எப்போது முழுமையாக நிறுத்தப்படும் என்ற சரியான தேதியை உறுதிப்படுத்த முடியவில்லை, ஆனால் அது வரவிருக்கும் வாரங்களில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் தனது பங்கீட்டளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாட்காஸ்ட்கள் பேஸ்புக் தளத்தில் இனி கிடைக்காது என்ற செய்தி குறித்து பயனர்களை எச்சரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. அந்தத் தகவலை எப்படி வெளியிட வேண்டும் என்பதை வெளியீட்டாளர்கள் முடிவு செய்ய நிறுவனம் அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, லைவ் ஆடியோ ரூம்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும் Facebook நேரலையில் பயனர்கள் வெறும் ஆடியோ அல்லது ஆடியோ மற்றும் வீடியோ இரண்டையும் கொண்டு Facebook இல் நேரலை செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், பல பெரிய நிறுவனங்கள் பாட்காஸ்ட் சந்தையில் பெரும் இடத்தை பிடிக்க விரும்புவதால், பாட்காஸ்ட் சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டது. அதனால் Spotify பல ஆடியோக்களின் ரைட்ஸை வாங்கி முன்னணியில் இருந்தது. அமேசான் போட்காஸ்ட் நெட்வொர்க் பெரும் ஹிட் ஷோக்களின் உரிமம் பெற்றது. மேலும், பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் 2021 இல் சுமார் $4 பில்லியன் மதிப்பிலான லைவ் ஆடியோ பிளாட்ஃபார்மான கிளப்ஹவுஸின் ஆடியோக்களை கூட நகலெடுக்க விரும்பின. இந்த நிலையில் Facebook 2021 ஆம் ஆண்டில் போட்காஸ்ட் துறையில் இறங்கியது, இருப்பினும், தற்போது ஒரு வருடம் கழித்து அதன் உரிமையாளர் மெட்டா நிறுவனம் சந்தைப் போட்டியினை சமாளிக்க முடியாமல் இவற்றை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர்.