கூகுளுக்கு சொந்தமான சாதனங்கள் அல்லது மென்பொருட்களில் ஏதாவது அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை கண்டுபிடித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் கூகுளின்  அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு (Threat Analysis Group)  தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் குரோம் மென்பொருட்களில் உளவு பார்க்கும் மால்வேர் இருப்பதை கண்டறிந்துள்ளது. சக்திவாய்ந்த இந்த ஸ்பைவேரை கூகுள் ‘பிரிடேட்டர்’(‘Predator’) என அழைக்கிறது.


பிரிடேட்டர் என்பது வடக்கு மாசிடோனியாவை தளமாகக் கொண்ட சைட்ராக்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்பைவேர் ஆகும். இது ஆடியோவைப் பதிவுசெய்வது, CA சான்றிதழ்களைச் சேர்ப்பது மற்றும்  செயலிகளை மறைக்கும் திறன் கொண்டது. TAG மற்றும் Citizen Labs இன் கருத்தின்படி , Cytrox தனது ஸ்பைவேரை எகிப்து, ஆர்மீனியா, கிரீஸ், மடகாஸ்கர், கோட் டி ஐவரி, செர்பியா, ஸ்பெயின் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள அரசாங்கங்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.




ஸ்பைவேர் ஹேக்கிங் தொழில்நுட்பத்தை URL ஆக சுருக்கி மின்னஞ்சல் அல்லது மொபைல் மூலம் அனுப்பி வைக்கிறது. இதனை பயனாளர்கள் அறியாமலேயே க்ளிக் செய்வதால்தான் விக்டிமாக மாறிவிடுகின்றனர். தற்போது குரோம் மென்பொருளில் நான்கு , ஆண்ட்ராய்ட் மென்பொருளில் ஒன்று என மொத்தம் ஐந்து ஸ்பைவேர் பாதிப்புகளை கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது.


இதன் மூலம் அப்ளிகேஷன்களை மறைப்பது மட்டுமல்லாமல் பயனாளர்களை உளவு பார்க்கவும் அவர்களின் உரையாடல் வரையில் கேட்கவும் முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது கூகுள். பிரிடேட்டர்’(‘Predator’)  zero-day  பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் .


 zero-day பாதிப்பு என்பது சாதனங்கள் மற்றும் மென்பொருளில் உள்ள அறியப்படாத மென்பொருள் குறைபாடுகள். அதை சரிசெய்ய ஒரு மென்பொருள் இணைப்பு உருவாக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹேக்கர்ஸ் மூலம் தீங்கிழைக்கும் அபாயம் உள்ளது. மென்பொருள் புதுப்பிப்பு வெளியிடப்பட்டால் மட்டுமே இந்த பிரச்சினையை சரி செய்ய முடியும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிரபலங்களை உளவு பார்க்கவே இந்த ஸ்பைவேர் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அவர்கள் எச்சரிகையுடன் செயல்பட வேண்டும் என்கிறது கூகுள் .அனைத்து குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கூகுள் ஏற்கனவே மென்பொருள் பேட்சை வழங்கியுள்ளது. இந்த ஸ்பைவேருக்கு இரையாவதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் குரோம் ஆகியவற்றில் புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டியதுதான் . அதனை இன்ஸ்டால் செய்தால் ஸ்பைவேர் அட்டாக்கில் இருந்து தப்பிக்க முடியும்.