ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ( சிஇஒ ) பதவியை ராஜினாமா செய்வதாக அதன் உரிமையாளரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் அறிவிப்பு:
இதுதொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த பெண் 6 வாரங்களில் தனது பணியை தொடங்குவார். தயாரிப்பு, மென்பொருள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் & தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக தனது பணி மாறும் ” என தெரிவித்துள்ளார்.
சிஇஒ சர்ச்சை:
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை தனதாக்கினார் எலான் மஸ்க். அதன் பிறகு அவர் ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்களால், டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து மஸ்க் விலக வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர்.
எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு:
விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?" என டிவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். மேலும், பெரும்பான்மையானவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்குத் தான் கட்டுப்படுவதாகவும் உறுதியளித்திருந்தார். இறுதியில் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எலான் மஸ்கிற்கு எதிராகத் திரும்பியது. இதில் 57.5 சதவிகிதத்துக்கும் அதிகமான பயனர்கள் எலான் பதவி விலக வேண்டும் என்றும் பதிலளித்திருந்தனர். இதையடுத்து உறுதியளித்ததன் படி எலான், ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.
எலான் மஸ்க் சொன்ன பதில்:
நெட்டிசன்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த மஸ்க், "தனது வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன். அதன்பின், சாஃப்ட்வேர் மற்றும் சர்வர் டீம்களை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன்" எனப் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தான், டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் புதுப்புது அம்சங்கள்:
இதனிடையே, டிவிட்டர் செயலியில் பல்வேறு புதுப்புது அம்சங்கள் வழங்கப்படும் அண்மையில் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். அதன்படி, பாதுகாப்பான (என்க்ரிப்டட்) முறையில் தனிநபர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்புவது, நீளமான டிவீட்களை பதிவு செய்வது, ஒருங்கிணைக்கப்பட்ட பணப்பரிமாற்றம் போன்ற பல்வேறு அம்சங்கள் புதிய மேம்படுத்தப்பட்ட டிவிட்டர் செயலியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, வீடியோ மற்றும் ஆடியோ கால் மேற்கொள்ளும் அம்சங்களும், விரைவில் வழங்கப்பட உள்ளன.