கடந்த 2017 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு, அமைச்சர் நட்டாவிடம் இ-சிகரெட் குறித்து  ஒரு கேள்வி எழுப்பினார்.அந்த கூட்டம் வழக்கத்திற்கு மாறாக சற்று சுவாரஸ்யமாக இருந்தது. வெங்கையா நாயுடுவின் கேள்விக்கு பதிலளித்த நட்டா , இ-சிகரெட் என்பது நிகோடின் புகையை கொண்டிருக்கும் ஒரு கருவி,  நிகோடின் கேப்சூலை கொதிநிலைப் படுத்துவதன் மூலம் நிகோடின் ஆவி வெளியாகிறது, புகைப்பிடிப்பவர்கள் இந்த ஆவியை இழுப்பார்கள் என்றார்.


புகையிலையின் மூலம் பெறப்படும் நிகோடினை நேரடியாக கொடுக்கும் முயற்சிதான் இது. இதன் மூலம் இ-சிகரெட் புகைக்கும் நபர், வழக்கமான புகைப்பிடித்தல் அனுபவத்தை பெறுகிறார். என்றும் பல நாடுகள் இதனை தடை செய்துள்ள நிலையில், நம் நாட்டில் இது குறித்த ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளோம் என்றார். அதன் பிறகு இ-சிகரெட்டில் பல்வேறு ஆபத்துகள் இருப்பதை உணர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டு இறக்குமதியும் நிறுத்தப்பட்டது. மீறினால் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர்கள் தங்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேற விரும்பினால் இ-சிகரெட்டை பயன்படுதுங்கள் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைத்தது.  அதேபோல ஒருமுறை இந்த இ-சிகரெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டால் மீண்டும்  வழக்கமான புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும்  பேட்டரி மூலம் இயங்கும் இந்த மின் சிகரெட்டை பயன்படுத்த அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட சில முக்கிய மாகாணங்கள் இ-சிகரெட்டை பயன்படுத்த தடை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில் அக்டோபர் 19, 2021 ஜமா நெட்வொர்க் ஓபன் என்னும் ஆன்லைன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் இ-சிகரெட் வழக்கமான புகைப்பிடித்தல் பழக்கத்திலிருந்து வெளியேற உதவும் என்பதை  மறுத்துள்ளன. இ-சிகரெட்டை தினமும் பயன்படுத்தினாலும் கூட சாதாரண புகைப்பழக்கத்திலிருந்து ஒருவரால் வெளியேற முடிவதில்லை என்றும்  புகைபிடிப்பதை விட்டுவிட்டு, இ-சிகரெட் அல்லது பிற புகையிலைப் பொருட்களுக்கு மாறிய நபர்களுக்கு மீண்டும் வழக்கமான புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு செல்லும் அபாயத்திற்கு இட்டுச்செல்வதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு 8.5  சதவிகிதம் பேர் இ-சிகரெட்டில் இருந்து வழக்கமான புகையிலை பழக்கத்திற்கு மாறலாம் எனவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.




மருத்துவ வல்லுநர்கள்  சிகரெட்டுகளைத் தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக  இ-சிகரெட்டுகளை பரிந்துரைத்தால்தான் அவை பிரபலமடைந்தன  ஆனால் "இ-சிகரெட் புகைப்பவர்கள் சாதரண சிகரெட்டிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்கிறார் பேராசிரியர் ஜான் பி. பியர்ஸ். கடந்த 2013 மற்றும் 2015-க்கு இடையில் 13,604 புகைப்பிடிப்பவர்களை கணக்கில் எடுத்துக்கொண்டது இந்த குழு. ஆண்டுக்கு ஒருமுறை அந்த நபர்களளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அவர்கள் 12 வகையான புகையிலை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளனர். அதில் முதலாம் ஆண்டு முடிவில் 62.9 சதவிகிதம் தனிநபர்கள் புகையிலையை விட்டுவிட்டனர், 9.4 சதவீதம் பேர் சிகரெட்டை விட்டு விட்டனர். 37.1 சதவிகிதம் பேர் மற்றொரு வகை புகையிலைக்கு மாறியிருக்கிறார்கள், 22.8 சதவீதம் பேர் இ-சிகரெட்டுக்கு மாறியுள்ளனர்.




அதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் 22.8 சதவிதத்தில் இருந்த இ சிகரெட் புகைப்பவர்களிலிருந்து 8.5 சதவிகிதம் பேர் மீண்டும் வழக்கமான புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. இ-சிகரெட்டில் இருந்து வழக்கமான புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு மாறும் நபர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.