Twitter vs Threads : ட்விட்டர் நிறுவனம் சார்பாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அறிமுகமான த்ரெட்ஸ் ஆப்


ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் அடிப்படையிலான ஆப்-ஆன த்ரெட்ஸை நேற்று (ஜூலை 6) அன்று மெட்டாவிற்கு சொந்தமான Instagram அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை தற்போது அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். த்ரெட்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட முதல் இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியன் பயனர்களும், முதல் 4 மணி நேரத்தில் 5 மில்லியன் பயனர்களும, முதல் 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களும் கணக்கு தொடங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ புதன்கிழமை மெட்டா தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு இதுகுறித்து கடிதம் அனுப்பி உள்ளார். 


ட்விட்டரை காப்பி அடித்த மெட்டா


அதில், ”ட்விட்டரின் ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை அனுமதியின்றி வேண்டுமென்றே சட்டத்திற்கு புறம்பாக தவறாக பயன்படுத்தியதாக நம்புகிறோம். எனவே உங்கள் மீது வழக்கு தொடுக்க உள்ளோம். ட்விட்டரில் வேலை பார்த்த ஊழியர்களை, மெட்டா நிறுவனத்தில் பணியில் அமர்த்தி எங்கள் செயலியை காப்பி அடித்து உள்ளனர். ட்விட்டரின் ரகசிய தகவல்களை மெட்டாவிற்கு இவர்கள் வழங்கி உள்ளனர்.






சிலர் ட்விட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே மெட்டா நிறுவனத்திற்கு சில தகவல்களை வழங்கி வந்துள்ளனர். அதன் மூலமே ட்விட்டர் நிறுவனத்தை காப்பி அடித்து த்ரெட்ஸ் செயலியை உருவாக்கி உள்னர்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


”காப்பி அடிப்பது தவறானது"


மேலும், ”ட்விட்டர் தனது அறிவுசார் சொத்து உரிமைகளை பாதுகாக்கும் விதமான வழக்கு தொடுக்க உள்ளது. ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் அல்லது பிற ரகசியமான தகவல்களை பயன்படுத்துவதை நிறுத்த மெட்டா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவன தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதன்படி, "போட்டி என்பது இருப்பது சரிதான். ஆனால் ஏமாற்று வேலையை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.