ஆவணங்களிலேயே முக்கியமானதாக இருக்கிறது ஆதார். எதாவது ஒரு தேவைக்காக அரசு அலுவலகங்களோ, தனியார் நிறுவனங்களையோ அணுகினால் அவர்கள் முதலில் கேட்கும் ஆவணமும் ஆதார் தான். இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. தேர்தலில்கூட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கைரேகை, கருவிழி, வீட்டு முகவரி என ஆதாரில் நம்முடைய வரலாறே கிடைத்துவிடும். இவ்வளவு முக்கியமான ஆதாரை அனைவரும் கையில் வைத்திருப்பது மிக முக்கியம். ஆனால் ஆதாரை அரசு கைக்கு அடக்கமான அட்டையாக கொடுப்பதில்லை. சற்று பெரிய சைஸ் அட்டையாகவே ஆதார் இருக்கிறது. இதனால் நம்முடைய வாலட்டுகளில் ஆதார் கார்டை அடக்கமாக வைக்க முடிவதில்லை. இந்த பிரச்னைக்கு இப்போது தீர்வு வந்துள்ளது.
ஏடிஎம் கார்டு போல அடக்கமான ஆதார் அட்டையை பிவிசி ஆதார் என்கிறோம். இதனை பெற UIDAI இணையதளத்துக்கு சென்று பதிவு செய்யலாம். பதிவு செய்து முடித்தவுடன் ரூ.50 ஆன்லைன் பேமண்டாக செலுத்த வேண்டும். பின்னர் பிசிவி ஆதார் அட்டை உங்கள் இல்லம் தேடி வரும்.
பதிவு செய்வது எப்படி?
1.ஆதார் தொடர்பான அரசின் அதிகார்பூர்வ இணையப்பக்கமாக https://uidai.gov.in/ க்கு செல்ல வேண்டும்
2.My Aadhaar ஐ க்ளிக் செய்து "Order Aadhaar PVC card’’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்ம்
3.அடுத்த பக்கம் ஓபன் ஆகும். அதில் உங்களது 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்ஜுவல் ஐடி அல்லது 28 இலக்க EIDஐ பதிவு செய்ய வேண்டும்
4.உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும். உங்கள் தகவல்கள் சரிபார்க்கப்படும்
5. தகவல்கள் சரிபார்க்கப்பட்டப்பின் உங்களது பிவிசி ஆதார் கார்டின் மாதிரி காண்பிக்கப்படும்
6.தகவல்கள் சரி என்றால் ரூ.50 செலுத்தி உங்களது கோரிக்கையை முடித்துக்கொள்ள வேண்டும். தபால் வழியாக ஆதார் வீடு தேடி வரும்.
ஆதாரில் பிழை ஏற்பட்டாலும் ஆன்லைனில் திருத்தம் செய்யலாம். திருமணம், வீடு மாற்றம் ஏற்பட்டால் ஆதார் கார்டில் முகவரி, பெயர் மாற்ற வேண்டி வரும். இதனை டெமோகிராபிக் அப்டேட் என்கிறோம். இந்த மாற்றங்கள் செய்ய ரூ.50 வசூலிக்கப்படும்.
புகைப்படம், விரல் ரேகை, பாலினம் உள்ளிட்ட பிழைகள் ஏற்படலாம். இதுமாதிரியான பிழைகளை திருத்தம் செய்வது பயோமெட்ரிக் அப்டேட் ஆகும். இதற்கான கட்டணம் ரூ.100. மற்றபடி புதிய ஆதார் அப்ளை செய்வதற்கோ, பெறுவதற்கோ பணம் கட்டத்தேவையில்லை.
>> ஆதார் அப்டேட்டுக்கு கட்டணம் இதுதான்.. அதிகம் கேட்டால் என்ன செய்யலாம்? - முழு விவரம்!