நவீன காலத்தில் மாறி வரும் தொழில்நுட்பம்
நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளும் மாறி வருகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் தெருவிற்கு ஓரிரு இடத்தில் மட்டுமே தொலைபேசி இருந்த நிலையில் தற்போது வீட்டில் 4 பேர் இருந்தால் அனைவருக்கும் தனிதனி மொபைல் போன் பயன்பாட்டில் உள்ளது. இருக்கிற இடத்தில் இருந்து எது வேண்டும் என்றாலும் ஆர்டர் செய்யலாம். அப்படி வசதிகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் குறிப்பாக மலைப்பகுதிகள், பாலைவனப்பகுதிகளில் மொபைல் போன் சிக்னல் கிடைக்கா நிலை இன்னமும் நீடித்து வருகிறது.
இதனையடுத்து வைஃபை காலிங் வசதியை BSNL அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் மொபைல் நெட்வொர்க் இல்லாத இடத்தில் வைஃபை (Wi-Fi) இணைய இணைப்பு வழியாக குரல் அழைப்புகளையும், SMS அனுப்புவதற்கு மொபைல் சேவை வழங்கப்படுகிறது. இந்த வசதியானது மோசமான செல் சிக்னல் உள்ள இடங்களில் அழைப்புகளைத் துல்லியமாக மேற்கொள்ள உதவுகிறது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம்
இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு தழுவிய அளவில் வைஃபை அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யும்.
Wi-Fi calling facility- யாருக்கெல்லாம் பயன்
வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் போன்ற பலவீனமான மொபைல் சிக்னல் உள்ள இடங்களில் தெளிவான மற்றும் நம்பகமான இணைப்பை இது உறுதி செய்கிறது. இதற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசிகளில் வைஃபை காலிங் என்பதை மட்டும் செட்டிங்ஸ் அமைப்பில் இயக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சாதன இணக்கத்தன்மை மற்றும் உதவிக்கு, அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு செல்லலாம் அல்லது 18001503 என்ற பிஎஸ்என்எல் உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.