பாரதி ஏர்டெல் நிறுவனம் இன்று மூன்றாம் காலாண்டு செயல்திறன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் விலை உயர்வு, கூகுள் நிறுவனத்தின் முதலீடு முதலான காரணிகளால் இந்தக் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் அதிகளவில் லாபம் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.


இந்த காலாண்டில் நிகழ்ந்த வியாபாரத்தை முன்வைத்து, மீண்டும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அதிகரிக்கப்படாவிட்டாலும், இந்த ஆண்டிலேயே ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டண உயர்வை அமல்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 


சராசரியாக ஒரு வாடிக்கையாளரின் மூலமாக பெரும் வருவாயை இந்த 2022ஆம் ஆண்டு முடிவதற்குள் 200 ரூபாயாக உயர்த்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



தேசிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளின் விலை சுமார் 1..5 சதவிகிதம் அதிகரித்து, பங்கு ஒன்றிற்கு சுமார் 719 ரூபாய் விலையாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், மொத்த லாபத்தில் சுமார் 3 சதவிகித இழப்பைப் பதிவு செய்திருந்தது பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்போதைய காலாண்டின் போது, சராசரியாக ஒரு வாடிக்கையாளரின் மூலமாக பெரும் வருவாய், 163 ரூபாய் எனக் கூறப்பட்டிருந்தது. 


கடன் பாதுகாப்பு, பாண்ட் விநியோகம் முதலானவை மூலமாக 7500 கோடி ரூபாய் கடனாகப் பெறுவதற்கும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 


மேலும், ஏர்டெல் நிறுவனம் கட்டண உயர்வு காரணமாகப் பெற்றுள்ள லாபம் அதிகரித்துள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனம் அடுத்து புதிய தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவதின் மீது கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2250 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.



ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கோபால் விட்டல் வெளியிட்ட வருவாய்க் குறிப்பில், `மாற்றப்பட்ட செல்ஃபோன் சேவை கட்டணங்களின் மொத்த விளைவும் நான்காவது காலாண்டின் போது முழுமையாகத் தெரிய வரும். எங்கள் இருப்புநிலை சரியாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்காக அரசிடம் பெற்ற கடனையும் தற்போது படிப்படியாக செலுத்தி வட்டியின் சுமையைக் குறைத்து வருகிறோம்’ எனக் கூறியுள்ளார். 


இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் நிற்பதற்குப் பலமான சான்றாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட முதலீடு இருப்பதாகவும் கோபால் விட்டல் கூறியுள்ளார். 5G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிர்ணயிக்கப்பட்டு விலைகள் சுட்டிக் காட்டியுள்ள ஏர்டெல் நிறுவனம் இந்த விலை சரியானதாக இருக்க வேண்டும் எனவும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை வரவேற்பதாகவும், மேலும் அவை விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.