பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வேறு பெயருடன் களம் இறங்கியது பப்ஜி பப்ஜியின் இந்திய பதிப்பின் பெயரை "BATTLE GROUND INDIA” என அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. புதிய பெயருடன் முன்பதிவை தொடங்கிய Battlegrounds Mobile India கூகுள் ப்ளே ஸ்டோரில் களம் இறங்கியது. அறிவிக்கப்பட்ட ஒருமாதமாக ரிலீஸ் தேதி எப்போது என அறிவிக்கப்படாத நிலையில் புதிய அறிவிப்புகள், பரிசுகள், டீசர்கள் என களைகட்டியது சோஷியல் மீடியா.
தொடங்கி சில வாரங்களுக்கு மேலாக பீட்டா வெர்சன் வெளியான சூழலில் முழு கேம் ஜூலை 2-இல் ப்ளே ஸ்டோரில் ரிலீஸ் ஆனது. தென்கொரியாவை சேர்ந்த கிராஃப்டர் என்பவர் வடிவமைத்த இந்த கேம் இந்தியாவில் அதிகம் ட்ரெண்டாகும் கேமாக இடம்பிடித்துள்ளது. அத்துடன் வெளியே வந்த ஒரு நாளிலேயே பலர் இதை பதிவிறக்கம் செய்தனர்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தங்களுக்கு எப்போது பேட்டில்கிரவுண்ட் என ஐஓஎஸ் பயனாளர்கள் ஆர்வத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஏனென்றால் இப்போது ஆண்ட்ராய்டில் மட்டுமே பேட்டில்கிரவுண்ட் வந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த அந்நிறுவனம், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தது. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களுக்கான அப்டேட் வரும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. அதற்கேன நேரம் தற்போது நெருங்கி வந்துள்ளது. ஐஓஎஸ்-க்கான பேட்டில்கிரவுண்ட் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
அதன்படி வரும் 20ம் தேதி ஐஓஎஸ்-ல் பேட்டில்கிரவுண்ட் அறிமுகமாகும் என தெரிகிறது. ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியுடன் ஒரு போஸ்டரையும் பேட்டில்கிரவுண்ட் இந்தியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கசிந்த தகவலின்படி, பேட்டில்கிரவுண்டை ஐஓஎஸ்-ல் வெளியிடுவதற்கான வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் வரும் 20ம் தேதி களத்தில் இறங்குமெனவும் தெரிகிறது. இந்த தகவலால் ஐ போன் வைத்திருக்கும் பேட்டில்கிரவுண்ட் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
முன்னதாக, செயலிகள் மூலமாக இந்தியாவை சீனா உளவு பார்ப்பதாக கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் முக்கியமானது பப்ஜி. பல்வேறு விமர்சனங்களுக்கு நடுவே கொடிகட்டிப்பறந்த பப்ஜி ஒரே நாளின் காணாமல் போனது.
அதன்பின் பப்ஜியின் இடத்தைப் பிடிக்க பல கேம்கள் போட்டிப்போட்டன. CALL OF DUTY, FAUG-G என நிறைய மொபைல் கேம் வந்தது. ஆனால் பயனில்லை . ஐஓஎஸ் பேட்டில்கிரவுண்ட் இந்தியாவுக்கான பிரத்யேக தயாரிப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பயனர்களையும், இந்திய சந்தையையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க இந்தியாவை மனதில் வைத்தே உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.