இஸ்ரேலை சேர்ந்த சைபர் பாதுகாப்பு பிரிவினரால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் என்னும் ஸ்பைவேர் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகசிய உளவு பார்க்கும் மென்பொருளான பெகாசஸ் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் தனிநபரின் மொபைல் புகைப்படங்கள் முதல் அவர் யாரிடம் பேசுகிறார் என்பது வரையில் ஒட்டுக்கேட்கவும்  உளவுபார்க்கவும் முடியும். கூடுதலாக என்கிரிப்டட் என சொல்லக்கூடிய மறைக்கப்பட்ட தகவல்களையும் கூட பார்க்க முடியும்.  ஆண்ட்ராய் மொபைல்போன்கள் இதுபோன்ற ஹேக்கிங் மென்பொருளுக்குள் சிக்குவது வழக்கம்தான் , ஆனால பல பாதுகாப்பு கோட்பாடுகளுடன் உருவாக்கப்படும் ஐபோனையும் பெகாசஸ் விட்டுவைக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி. இது உலகம் முழுவதும் அதிவர்லைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது Apple நிறுவனம் , பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு பிரிவான NSO மீது வழக்கு தொடர்ந்துள்ளது.




இது தொடர்பாக அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள ஆப்பிள் நிறுவனம், பெகாசஸ் மென்பொருளால் உலகம் முழுவதும் உள்ள 1 பில்லியன் ஆப்பிள் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் எனவே அந்த மென்பொருளை நிரந்தரமாக தடை செய்ய வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.


மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இஸ்ரேல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு பிரிவான  NSO இதனை மறுத்துவருகிறது. இது குறித்து  NSO அளித்த விளக்கத்தில் “பெகாசஸ் மென்பொருளானது பயங்கரவாதிகளையும், குழந்தைகளை குறிவைக்கும் பாலியல் குற்றவாளிகளையும் அடையாளம் காண உருவாக்கப்பட்டது. மேலும் அந்த குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதை  தடுக்க காண நாட்டிற்கு பெரும் உதவியாக இருப்பதாகவும்" தொடர்ந்து வாதம் செய்து வருகிறது. என்னதான் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் என கூறினாலும் , இது மக்களையும் , முக்கிய பிரதிநிதிகளையும் வேவு பார்க்கவே பல நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆப்பிள் தொடந்துள்ள வழக்கு  NSO விற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் , ஏனெனில் பெகாசஸ் விவகாரத்திற்கு பிறகு அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் என்.எஸ்.ஓ கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 3,730 கோடி) மத்திப்பிலான கடனில் உள்ளது. இதனால்  NSO விற்கு வழக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தலாம்.




பெகாசஸ் மென்பொருளை வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள் இஸ்ரேலின்   NSO  நிறுவனத்திடம் இருந்து விலைக்கு  வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள், எதிர்கட்சி தலைவர்கள் என பலரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனால்  இந்தியாவின் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் கூட முடங்கியது. ஆனால் இந்தியா பெகாசஸ் மென்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனமும் பெகாசஸிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்ததும் நினைவுக்கூரத்தக்கது.