வயது முதிர்வை தடுத்து இளமையாக வாழ வைக்கும் தொழில்நுட்ப ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு உள்ள நிறுவனத்தில் உலகின் நம்பர் 1 பணக்காரரும் அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் முதலீடு செய்து உள்ளார்.
ஆல்டோ லேப்ஸ் என்ற இந்த நிறுவனம் 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. உலகின் திறமையான விஞ்ஞானிகளை ஒன்றினைத்து வயது குறைப்பு தொழில்நுட்பத்தை தயாரிக்கும் ஆராய்ச்சிப் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஒரு விஞ்ஞானிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ஊதியமாக வழங்கி வரும் இந்த நிறுவனம் விரைவில், விரிவுபடுத்தப்பட உள்ளதாக MIT TECH REVIEW என்ற தகவல் தொடர்பு ஊடகம் தெரிவித்து உள்ளது.
முதிர்ச்சி அடைந்த செல்களுக்கு புரோட்டின் சத்துக்களை சேர்த்து ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் இளமையான தோற்றத்தை வழங்குவதற்கான ஆராய்ச்சிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. ஆல்டோ லேப்ஸ் நிறுவனத்தின் விஞ்ஞான ஆலோசனை வாரியத்தின் தலைவராக நோபல் பரிசு வென்ற சின்கா யமனாகா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இது குறித்து MIT TECH REVIEWக்கு யமனாகா அளித்துள்ள விளக்கத்தில், “பல்வேறு தடைகளை கடந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு அதிக உழைப்பு தேவைப்படும்.” என கூறி இருக்கிறார்.
இந்த நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும், பிரிட்டன் மற்றும் ஜப்பானிலும் கிளைகளை தொடங்க முடிவு செய்து உள்ளது. இதில் ஜெஃப் பெசோஸின் “பெசோஸ் எக்பெடிசன்ஸ்” நிறுவனம் முதலீடு செய்து இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என MIT TECH REVIEW தெரிவித்து உள்ளது. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டும் வயது குறைப்பு தொடர்பான தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொண்டு வரும், யுனிட்டி டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் ஜெப் பெசோஸ் முதலீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப் பெசோஸ் இணையதளம் வளரத் தொடங்கிய காலமான 1994 ஆம் ஆண்டிலேயே அமேசான்.காம் என்ற பெயரில் சிறிய அளவிலான இணையதளத்தை தொடங்கி அதில் புத்தகங்களை விற்பனை செய்யத் தொடங்கினார். அதில் கிடைத்த வெற்றியால் ஏற்பட்ட நம்பிக்கையையும் பணத்தையும் முதலீடாக கொண்டு அமேசான் இணைய வழி சந்தையை நிறுவினார். அத்துடன் நிற்காமல், அமேசான் எலெக்டிரானிக் கருவிகள், அமேசான் கிண்டில், இணையதள பராமரிப்பு நிறுவனமான அலெக்சா என அடுத்தடுத்து தொழில்களை தொடங்கி வெற்றிக்கொடி நாட்டினார்.
புதுப்புது விசயங்களை செய்து பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ஜெஃப் பெசோஸ், 2013-ம் ஆண்டு வாஷிங்க்டன் போஸ்ட் செய்தித் தாள் நிறுவனத்தையும் வாங்கினார். அதுபோல் புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை தொடங்கி, விண்வெளி சோதனைகளை நடத்தி வருகிறார். அண்மையில் அமேசான் சி.இ.ஒ பொறுப்பிலிருந்து விலகிய ஜெஃப் பெசோஸ், தங்கள் நிறுவனம் உருவாக்கிய புளூ ஆரிஜின் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றுத் திரும்பினார்.