ஜிம்பாப்வே அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ள புகைப்படம் அனைவரின் நெஞ்சையும் உருக வைத்துள்ளது. காரணம் கிரிக்கெட் என்றாலே அது பணம் கொழிக்கும் விளையாட்டு, அதில் விளையாடும் வீரர்கள் கோடிகளில் வருவாய் சம்பாதிப்பார்கள் என்பது போன்ற ஒரு எண்ணம் இருக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய அப்படி தான், ஆனால் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல், புது ஷூ வாங்க கூட காசில்லாத கிரிக்கெட் வீரர்களும் இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி கிரிக்கெட் விளையாட்டு கருணை காட்டாத நாடுதான் ஜிம்பாப்வே. ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரான ரியான் பர்ல் தங்கள் அணியின் நிலையை பிரதிபலிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் "கிரிக்கெட் வீரர்கள் அணியும் சில ஷூ தரையில் சிதறி கிடக்கிறது." அத்துடன் ஒரு வாசகமும் இடம்பெற்றுள்ளது "எங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா ? அப்படி நடந்தால் நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடருக்கு பின்பு எங்கள் ஷூவை பசை வைத்து ஒட்டவேண்டிய அவசியம் இருக்காது" என பதிவிட்டுள்ளார்.
என்னது ஜிம்பாப்வே வீரர்கள் கிழிஞ்ச ஷூவை பசை வைத்து ஒட்டி போட்டுக்கொள்கிறார்களா ?
ஆமாம், ஜிம்பாவே போன்ற சில நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பெரிய அளவிலான சம்பளத்தை வீரர்களுக்கு வழங்குவதில்லை. மேலும் அதிக அளவில் பணம் புரளும் கிரிக்கெட் தொடர்களிலும் அந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டே மற்ற வேலைகளையும் பார்ட் டைமாக செய்யும் வீரர்கள் ஏராளம்.
நிலைமை இப்படியிருக்க இந்த பதிவை கண்டு பொங்கிய ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் - இதனை ரீ ட்விட் செய்தனர். வேதனையடைந்த சிலர் உங்கள் காலணி அளவை அனுப்புங்கள், நான் ஷூ வாங்கி அனுப்புகிறேன் என்று நெகிழ்ச்சியான பதிவுகளை பதிவிட்டனர்.
இதை கண்ட உலகின் முன்னணி விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான பூமா உதவிக்கரம் நீட்டியுள்ளது. ரியான் பர்ல் பதிவிற்கு ரிப்ளை செய்துள்ள பூமா "பசையை ஓரம் வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது, நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து தனக்கு கிடைத்த பேராதரவிற்கு பின்பு ட்வீட் செய்துள்ள ரியான் பர்ல் "நான் பெருமையாக அறிவிக்கிறேன், பூமா நிறுவனத்துடன் இணைகிறேன். இது அனைத்திற்கும் காரணம் ரசிகர்களான நீங்கள் கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு அளித்த ஆதரவுதான், உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கடன்பட்டுள்ளேன் நன்றி பூமா" என்று ரியான் பதிவிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரியான் பர்ல் ஜிம்பாப்வே அணிக்காக 3 டெஸ்ட், 18 ஒருநாள், 25 டி 20 போட்டிகளில் தற்போது வரை விளையாடியுள்ளார்.