மத்திய அரசு தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்து உரிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்த விருதுகளை அளித்து கெளரவித்தது. இந்நிலையில், எனக்கு மத்திய அரசு அளித்த அர்ஜுனா விருதை காலமாகிவிட்ட எனது தாத்தா-பாட்டிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் தெரிவித்தார்.


அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமலுக்கு இந்திய விளையாட்டு உலகின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருதும், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருதும் அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.


இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். விருது வாங்கியது குறித்து தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் கூறுகையில், "அர்ஜுனா விருதை எனது தாத்தா-பாட்டிக்கு சமர்ப்பிக்கிறேன். நான் விருது வாங்கியத் தருணம் நம்ப முடியாததாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.



தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்கள் மூன்று பேருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "பர்மிங்காம் காமன்வெல்த் 2022ல் இந்தியாவுக்கு 3 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்து அசத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வாகியுள்ளதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். 


Bangladesh vs India: ரோகித், விராட் ஏமாற்றம்.. 186 ரன்னில் சுருண்ட இந்தியா..! வங்காளதேசம் அபார பவுலிங்..!


அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் ஆகியோருக்கும் எனது பாராட்டுகள். தகுதிவாய்ந்த மூவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்கள் மின்ன ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்" என்று வாழ்த்தியிருந்தார்.


தடகள வீராங்கனை சீமா புனியா, பேட்மிண்டன் வீரர் பிரனாய், ஜூடோவில் முதன்முறையாக இந்தியாவிற்காக காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற சுஷிலா தேவி, பாரா வீரர்களான தருண் தில்லான், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.


துரோணாச்சாரியா விருது:


சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியர் விருது ஜிவான்ஜோத்சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி ஓமர்(குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா துப்பாக்கிச்சூடு) மற்றும் சுஜித்மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.


அஸ்வினி அக்குஞ்சி (தடகளம்), தரம்வீர்சிங் (ஹாக்கி), பி.சி.சுரேஷ்(கபடி) மற்றும் பகதூர் குருங்(பாரா தடகளம்) ஆகியோருக்கு தயான்சந்த் விருது வழங்கப்பட்டது. மௌலான அபுல்கலாம் அசாத் டிராபி எனப்படும் மாகா டிராபி இந்த முறை அமிர்தரசஸ் குருநானக் தேவ் பல்கலைகழகத்திற்கு வழங்கப்பட்டது.