இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மழை காரணமாக மிகவும் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஜெமிசேன் பந்துவீச்சில் திணறி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு  101 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் மழை காரணமாக நான்காவது நாள் ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டது. 


இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. அப்போது நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குறிப்பாக அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மெதுவாக விளையாடினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மூன்றாம் நாளைவிட நேற்று சிறப்பாக பந்துவீச தொடங்கினர். ஷமி,இஷாந்த்,பும்ரா ஆகிய மூவரும் நல்ல லைன் மற்றும் லென்ந்தில் பந்துவீசியதால் நியூசிலாந்து வீரர்கள் சற்று திணறினர். 


ஷமி அசத்தல்:




மூன்றாவது நாள் ஆட்டத்தில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசு வந்தார். எனினும் அவருக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் நேற்று தொடக்கம் முதல் அவர் நல்ல லைனில் பந்துகளை வீச தொடங்கினார். அது பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. அனுபவ வீரர் ராஸ் டெய்லரை சிறப்பான பந்து மூலம் ஆட்டமிழக்க செய்தார். அதன்பின்னர் வாட்லிங்கையும் நல்ல பந்தின் மூலம் கிளின் போல்ட் செய்தார். தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.


நியூசிலாந்து 32 முன்னிலை:


ஒரு புறம் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி வந்தாலும் மற்றொரு புறம் நியூசிலாந்து அணி தொடர்ந்து ரன்களை சேர்த்து கொண்டு இருந்தது. ஜெமிசேன் மற்றும் டின் சவுதி கேப்டன் கேன் வில்லியம்சனிற்கு நல்ல ஆதரவு அளித்தனர். ஜெமிசேன் 21 ரன்களும் டிம் சவுதி 30 ரன்களும் அடித்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நியூசிலாந்து அணி கடைசி ஐந்து விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 249 ரன்கள் சேர்த்து இந்தியாவின் ஸ்கோரைவிட 32 ரன்கள் முன்னிலை பெற்றது. 


டிம் சவுதி அசத்தல்:


இதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது.  முதல் இன்னிங்ஸை போல் இரண்டாவது இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா மற்றும் கில் நிதானமாக தொடங்கினார்கள். எனினும் 11ஆவது ஓவரில் 8 ரன்களுடம் கில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சற்று கவனமாக ஆடி வந்த ரோகித் சர்மாவும் சவுதி பந்துவீச்சில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடைசில் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 8*, புஜாரா 12* களத்தில் உள்ளனர்.  இந்திய அணி நியூசிலாந்து அணியைவிட 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 




டிராவை நோக்கி:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ரிசர்வ் நாள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்றைய ரிசர்வ் நாளில் 98 ஓவர்கள் வீசப்பட உள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றதன் மூலம் அந்த அணி தோல்விக்கான வாய்ப்பை சற்று தவிர்த்துள்ளது. ஆகவே கடைசி நாள் ஆட்டத்தில் போட்டி டிரா அல்லது நியூசிலாந்து அணி வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் உள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் முன்னிலை வெறும் 32 ரன்களில் தான் உள்ளது. எனவே இந்தியாவின் 8 விக்கெட்களை விரைவில் நியூசிலாந்து எடுக்கும் பட்சத்தில் போட்டி நியூசிலாந்திற்கு சாதகமாக அமையும். அதேசமயம் ஒருவேளை இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்தால் போட்டி டிரா ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முதல் ஐந்து நாட்களில் வெறும் 225 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 60 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்கா: அசத்திய இந்தியா வம்சாவளி பவுலர்!