கிரிக்கெட்டில் எப்போதும் தனித்துவம் வாய்ந்த கேப்டன்களாக வரலாற்றில் எப்போதுமே சிலர் இருப்பார்கள். அவர்களில் இலங்கையின் கேப்டன் ரணதுங்காவிற்கு தனி இடம் உண்டு. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை இன்று வரை தன்வசம் வைத்துள்ள ஒரே கிரிக்கெட் வீரர் ரணதுங்கா.
ரணதுங்காவிற்கு என்னாச்சு?
களத்தில் ஆக்ரோஷமாகவும், வீரர்களுக்கு உறுதுணையாகவும் செயல்படும் கேப்டனான ரணதுங்காவை, 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
கபில்தேவுடன் நிற்கும் ரணதுங்கா மிகவும் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காட்சி தருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பருமனான தோற்றத்தில் இருந்த ரணதுங்கா இந்தளவிற்கு மெலிந்து இருப்பது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதை நம்ப முடியவில்லை என்று கூறுகின்றனர். சிலர் ரணதுங்காவிற்கு ஏதேனும் உடல்நலக்குறைவா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இலங்கைக்காக உலகக்கோப்பையை வென்ற ஒரே கேப்டன்:
தற்போது 60 வயதாகிய ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி ஆட்சி செய்தவர் என்றே கூற வேண்டும். அவரது கேப்டன்சியில் அவர் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ், அரவிந்த் டி சில்வா, கலுவிதரானா, முத்தையா முரளிதரன் ஆகியோரின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினார்.
இந்திய, பாகிஸ்தான் அணிகளைப் போலவே ஆசிய கண்டத்தில் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பதற்கு ரணதுங்காவின் பங்கும் முக்கியமானது ஆகும். 1996ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியில் ரணதுங்கா 37 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 47 ரன்கள் எடுத்தார்.
அரசியலில் கால்தடம்:
1982ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 18 வயதிலே அறிமுகமான ரணதுங்கா 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 38 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 105 ரன்கள் எடுத்துள்ளார். 269 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 49 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 456 ரன்கள் எடுத்துள்ளார். 205 முதல்தர கிரிக்கெட்டில் ஆடி 25 சதங்கள், 63 அரைசதங்களுடன் 11 ஆயிரத்து 641 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 307 போட்டிகளில் ஆடி 4 சதங்கள், 55 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 491 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 79 விக்கெட்டுகளையும், முதல்தர கிரிக்கெட்டில் 94 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2000ம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரணதுங்கா அதன்பிறகு அந்த நாட்டு அரசியலில் ஈடுபட்டார். அந்த நாட்டு எம்.பி,யாகவும் பதவி வகித்துள்ளார்.