மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை வீழ்த்தி, முதன்முறையாக கோப்பையை வென்றது இந்திய அணி. போட்டியில் 22வது நிமிடத்தில் அன்னுவும், 41வது இடத்தில் நீலமும் இந்திய அணிக்காக கோல் அடித்தனர். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தி, முதன்முறையாக மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. தென்கொரியா அணி ஏற்கனவே நான்கு முறை இந்த கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.






பரிசுத்தொகை அறிவிப்பு:


முதன்முறையாக கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி ஜுனியர் அணியை பாராட்டி, இந்திய ஹாக்கி சம்மேளனம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 2 லட்ச ரூபாயும், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரையிறுதி முடிவுகள்:


மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதிப்போட்டியில், நான்கு முறை சாம்பியனான தென் கொரியா  2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


போட்டி சுருக்கம்:


ஜப்பானின் ககாமிகஹாராவில்  மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே வந்து விட்டனர். பின்பு, போட்டியின் 22வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் இருந்து அன்னு அடித்த, லோ லெஃப்ட் ஷாட் மூலம் இந்திய அணி முன்னிலை பெற்றது.


இருப்பினும் தென் கொரியா அணி உடனடியாக பதிலடி தந்தது. இந்திய அணி கோல் அடித்த அடுத்த மூன்றாவது நிமிடத்திலேயே பார்க் சியோ யோன் தனது அணிக்கான கோலை அடித்தார். இதனால், 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன. இதையடுத்து இந்திய அணியின் நீலம் 41வது நிமிடத்தில் இந்திய அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதையடுத்து இந்திய அணி எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியது. இருப்பினும், தென்கொரியா அணிக்கு சாதகமாக பல்வேறு வாய்ப்புகளை இந்திய அணியினர் விட்டுக்கொடுத்தாலும் அந்த அணியினர் அதை கோலாக மாற்ற தவறினர். இதனால், போட்டி நேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கோப்பையை வென்றது.


முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, சீனாவிடம் 2-5 என்ற கணக்கில் தோற்றது.