இங்கிலாந்து லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியானது மிகவும் பழமையான மற்றும் மரியாதைக்குரிய தொடராகும். 1877ம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் இப்போட்டித்தொடர் ஆண்டுதோறும் ஜூன் மாதக்கடைசியில் தொடங்கி ஜுலை மாதம் முடிவடையும். மேலும், உலகம் முழுவதும் நடைபெறும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடராகும்.
ஒவ்வோராண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடினதரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடராக உள்ளது.
விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். ஸ்கர்ட், ஹார்ட்ஸ் மற்றும் டிராக்கூட்கள் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்குஅ வேண்டும். அதில், அரை வெள்ளை அல்லது கிரீம் வெள்ளை போன்ற உடைகளை வீரர் மற்றும் வீராங்கனைகள் அணிந்தால் கூட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்தநிலையில், மாதவிடாய் காலத்தில் சுத்தமான வெள்ளைநிற ஷார்ட்ஸ் அணிவதால் போட்டியில் முழுகவனம் செலுத்தி விளையாட முடியவில்லை என டென்னிஸ் வீராங்கனை தொடர்ந்து ட்விட்டர் வாயிலாக புகார் அளித்து வந்தனர்.
முன்னாள் போர்ட்டோ ரிக்கன் வீராங்கனை மோனிகா புய்க் கடந்த மே மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விம்பிள்டனில் முழு வெள்ளை அணிய வேண்டியதே மன அழுத்தம். அந்த இரண்டு வாரங்களில் மாதவிடாய் வராமல் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
அதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை டாரியா சவில்லி, போட்டியின் ஆடைக் குறியீடு காரணமாக தனது காலத்தை குறிப்பாக மாற்றிக் கொண்டதாகக் கூறினார். "எங்களுக்கு ஏற்கனவே போதுமான அளவு மன அழுத்தம் இருப்பதால், இரத்தப்போக்கு பற்றி நான் கவலைப்பட விரும்பவில்லை என்பதற்காக, விம்பிள்டனைச் சுற்றி என் மாதவிடாய் காலத்தை நானே தவிர்க்க வேண்டியிருந்தது” என பதிவிட்டிருந்தார்.
வீராங்கனை ஹீதர் வாட்சன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விம்பிள்டனின் போது மாதவிடாய் ஏற்படாமல், சுழற்சியை மாற்ற கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டதாக கூறினார்.
இதையடுத்து, உடை விஷயத்தில் சில தளர்வுகளை விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி, இனி வரும் விம்பிள்டன் தொடர்களில் விளையாடும் வீராங்கனைகள் விளையாடும்போது, தாங்கள் விரும்பிய அடர் நிற ஷார்ஸ்களை அணியலாம் என்றும், விம்பிள்டனின் புதிய ஆடை விதிகள் ஜூலை மாதம் போட்டியின் 136வது அரங்கில் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆல் இங்கிலாந்து கிளப் தலைமை நிர்வாகி சாலி போல்டன் ஒரு அறிக்கையில், "வீரர்களை ஆதரிப்பதற்கும், அவர்கள் எவ்வாறு சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பது குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
வீரர்கள் மற்றும் பல பங்குதாரர் குழுக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, விம்பிள்டனில் வெள்ளை ஆடை விதியை புதுப்பிக்கும் முடிவை நிர்வாகக் குழு எடுத்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அடுத்த ஆண்டு முதல், சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் பெண்கள் வண்ண அண்டர்ஷார்ட்களை அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் போட்டிகளில் வீராங்கனைகள் முழுமையாக கவனம் செலுத்த முடியும்” என தெரிவித்திருந்தார்.