துருக்கி தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்தவர் 28 வயதான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான். இவர் துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இடிபாடுகளில் நடுவே அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, துருக்கியின் தனியார் கால்பந்து அணியான யெனி மதல்யஸ்போர் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட பதிவில், ” எங்கள் கோல்கீப்பரான அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான், நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது உயிரை இழந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அருமையான மனிதர்.. உங்களை என்றும் மறக்க மாட்டோம்” என்று பதிவிட்டு இருந்தனர்.
அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மறைவுக்கு சக கால்பந்து வீரர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துருக்கிய இரண்டாம்-பிரிவு கிளப்பான யெனி மலாத்யாஸ்போரில் கடந்த 2021 ம் ஆண்டு இணைந்த டர்கஸ்லான் ஆறு முறை விளையாடியுள்ளார்.
கடந்த திங்கள் அன்று அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் மனைவியை உயிருடன் மீட்டுள்ளதாகவும், எவ்வளவோ போராடியும் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
8000 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை:
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் கடந்த 6ம் தேதி அதிகாலை 7.8 என்ற ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சரிந்து நொருங்கின. தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் இருந்து வெளியே வர மக்கள் முயற்சி மேற்கொள்ள நினைக்கும்போது, துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் அடுத்ததாக 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில், துருக்கி மற்றும் சிரியா முழுவதும் இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போதுவரை 8,000 கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு, சுமார் 6,000க்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.