உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக்கான கணக்கில் இருந்து பல மில்லியன் டாலர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பிரிண்டிங் தொழில்முறை விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் மின்னல் வேக மனிதர் என்ற சாதனையை ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் இன்னும் தனதாக்கி வைத்துள்ளார். இந்தநிலையில் உசைன் போல்ட் பயன்படுத்தி வந்த முதலீட்டுக்கான கணக்கில் இருந்து பல மில்லியன் டாலர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
ஜமைக்காவைன் ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீ லிமிடெட் என்ற முதலீட்டு நிறுவனத்துடன், உசைன் போல்ட் கடந்த 10 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்துள்ளார். திடீரென அவரது கணக்கில் இருந்து குறைந்தது 12 மில்லியன் டாலர்கள் காணாமல் போயுள்ளது என்றும், இதுபோன்ற சூழ்நிலை இத்தனை வருடத்தில் இதுவே முதல்முறை என்றும் போல்ட்டின் வழக்கறிஞர் கூறியுள்ளனர். மேலும், போல்ட்டின் கணக்கில் தற்போது 12,000 டாலர் மட்டுமே மீதம் உள்ளதால், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போல்ட்டின் வழக்கறிஞர் லிண்டன் பி கார்டன் ஃபார்ச்சூன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், “இந்த கணக்கு போல்ட்டின் ஓய்வு மற்றும் வாழ்நாள் சேமிப்பின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த மாதிரியான நிகழ்வு எவருக்கும் வருத்தமளிக்கும் செய்தியாகும். இழந்த தொகையை நிறுவனம் திருப்பி தராவிட்டால் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம். இது போல்ட்க்கு மிகப்பெரிய ஏமாற்றம். இந்த பணத்தை மீட்டு போல்ட் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிறுவனம் சொன்னது என்ன..?
கிங்ஸ்டனை தளமாகக் கொண்ட ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் (எஸ்எஸ்எல்) கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரின் ஒருவரின் மோசடி நடவடிக்கைதான் இது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமலாக்க நிறுவனத்தில் புகார் அளித்துள்ளோம்.” என்று தெரிவித்தது. மேலும், சொத்துகளைப் பாதுகாக்கவும், நெறிமுறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.