அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜோகோவிச் சாம்பியன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசைப்பட்டியலில் முன்றாவது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்டார். ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். உடனடியாக சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுத்த மெத்வதேவ் இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். இருவரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த, இந்த போட்டி 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது. இறுதியில் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றியை தனதாக்கினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை வென்ற ஜோகோவிச், 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று புதிய சாதனை படைத்தார். 25 கோடி ரூபாயை பரிசுத்தொகையாகவும் பெற்றார். அதோடு, இந்த வெற்றியின் மூலம் 2021ம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் தன்னை வீழ்த்தியதற்கு, மெத்வதேவை வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை அவர் வெல்வது நான்காவது முறையாகும்.
சாதனை பயணம்:
ஏற்கனவே இந்த சீசனில் ஆஸ்திரேலியா மற்றும் பிரெஞ்சு ஓபன் தொடர்களை வென்ற ஜோகோவிச், அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரையும் வென்றுள்ளார். இதன் மூலம், ஒரே ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஜோகோவிச் வெல்வது இது நன்கு முறையாகும். அதன்படி, 2011, 2015, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் இவர் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிகமுறை (36) இறுதிப்போட்டிக்கு முன்னேறியதும் இவர் தான். அதில் 10 முறை அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி அடங்கும். 1968ம் ஆண்டு தொடங்கிய ஓபன் டென்னிஸ் தொடர் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற, செரினா வில்லியம்ஸின் (23) சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளார். அதோடு, டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் விரர் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற, வயதான விரர் என்ற பெருமையும் ஜோகோவிச்சையே சேரும்.