உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் கொட்டியதில் நடுவராக பணியாற்றிய நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு ஒரு மைதானத்தில் கான்பூர் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது அந்த போட்டியின் நடுவராக 65 வயதான மாணிக் குப்தா என்பவர் செயல்பட்டார். அப்போது எதிர்பாரத விதமாக மைதானத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் இடம்பெற்ற தேன் கூடு கலைந்தது. 

அதில் இருந்த தேனீக்கள் மைதானத்திற்குள் புகுந்தது. இதனால் பீதியில் விளையாடிய வீரர்கள், மைதான நிர்வாகிகள், போட்டியிஅ பார்த்துக் கொண்டிருந்த மக்கள் என அனைவரும் தற்காத்துக் கொள்ள சிதறி ஓடினர். எனினும் தேனீக்கள் பலரையும் கொட்டியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தேனீக்களை அங்கிருந்து கஷ்டப்பட்டு விரட்டியடித்தனர். தொடர்ந்து தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

இந்த சம்பவத்தில் மாணிக் குப்தாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் அவர் சுக்லகஞ்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

உடலில் ஒட்டிக்கொண்டிருந்த தேனீக்கள்

மாணிக் குப்தாவின் உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மற்றொரு நடுவரான ஜெகதீஷ் சர்மாவும் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். எனினும் அவர் ஆபத்துக் கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணிக் குப்தா கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கான்பூர் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து உள்ளூர் போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மாணிக் குப்தாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, தேனீக்கள் அவரது முகத்திலும் உடலிலும் ஒட்டிக்கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இதன்மூலம் தேனீக்கள் தாக்குதலின் தீவிரத்தை புரிந்துக் கொள்ள முடியும் என கான்பூர் கிரிக்கெட் சங்க தலைவர் எஸ்.என்.சிங் கூறியுள்ளார்.  

முன்னால் நடந்த சம்பவம்

கடந்த 2019ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அப்போது எங்கிருந்தோ திடீரென மைதானத்துக்குள் நுழைந்த தேனீக்கள் அங்கிருந்த மக்களை தாக்கியதில் பலரும் காயமடைந்தனர். ஆனால் உயிரிழப்புகள் எதுவும் நிகழ்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.