ஐபிஎல் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. 


இதனைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியின் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை பதிவு செய்து வருகின்றனர். அதில் சிலர் இந்தப் போட்டியின் போது தோனியின் புன்னகையை பதிவிட்டு இதுபோதும் எங்களுக்கு வேற என்ன வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். 






 


ஏற்கெனவே சென்னை அணியின் பேட்டிங்கின் போது தோனி அடித்த சிக்சரை பலரும் ட்விட்டரில் பாராட்டி வந்தனர். தற்போது சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு தோனியின் புன்னகையும் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் களமிறங்கிய சென்னை அணி 3ல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 


 






முன்னதாக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூபிளசிஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 220 ரன்கள் எடுத்து அசத்தியது. சிறப்பாக விளையாடி டூபிளசிஸ் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கம் முதல் விக்கெட்கள் மல மல வென சரிந்த வண்ணம் இருந்தது. 


 






முதல் 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து கொல்கத்தா அணி தடுமாறி வந்தது. இந்தச் சூழலில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸல் சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கார்த்திக்(40), ரஸல்(54) ரன்களுடன் வெளியேறினர். அதன்பின்னர் சென்னை அணி எளிதாக வெற்றிப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


 






எனினும் அதன்பின்னர் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் அதிரடி காட்ட தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவரே தனியாக கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுவிடுவார் என்ற சூழல் உருவானது. அந்த சமயத்தில் தோனி தனது சிறப்பான நகர்த்தலால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். இறுதியில் 19.1 ஓவர்களில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 202 ரன்கள் குவித்தது. கடைசி வரை கம்மின்ஸ் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி அடுத்து வரும் 25ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மும்பையில் எதிர்கொள்ள உள்ளது.