உலகில் அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கருதப்படுவது கால்பந்து. கோடிக்கணக்கான மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய கால்பந்தை உலக அரங்கில் எடுத்துச் செல்ல போராடியவர்களில் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரிக்கு என்று தனி இடம் உண்டு.
இவருக்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, ரசிகர்களாகிய நாம் தெரிந்து கொள்ளாத தகவல்களை கீழே காணலாம்.
- சுனில் சேத்ரியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு கோடிக்கணக்கு ஆகும். இந்திய கால்பந்து அணிக்காக ஆடியது, பூமா மற்றும் பின்டோலா போன்ற நிறுவனங்களின் தூதராக இருந்ததன் மூலமாகவே அவர் பிரதான வருவாயை ஈட்டியுள்ளார்.
- இந்தியாவிற்காக சர்வதேச அளவில் அதிக கால்பந்து போட்டிகளில் ஆடிய வீரர் சுனில் சேத்ரி. அவர் மொத்தம் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 145 போட்டிகளில் ஆடியுள்ளார்.
- சர்வதேச அளவில் 2005ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான சுனில் சேத்ரி தனது முதல் கோலை அந்த போட்டியில் அடித்தார்.
- சர்வதேச அளவில் கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லயனல் மெஸ்ஸிக்கு அடுத்த படியாக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள வீரர் சுனில் சேத்ரி.
- இந்திய நாட்டின் மிகப்பெரிய விருதான கேல் ரத்னா விருதை பெற்ற முதல் கால்பந்து வீரர் இவர் ஆவார். சுனில் சேத்ரி அர்ஜூனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
- மிகப்பெரிய கார் பிரியரான சுனில் சேத்ரியிடம் ஆடி ஏ6, டொயோட்டா பார்ச்சுனர். ஸ்கார்பியோ, கியா செல்டாஸ் கார்கள் உள்ளது.
- சுனில் சேத்ரிக்கு பெங்களூரில் 3 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று உள்ளது.
- இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஏ.ஐ.எஃப்.எஃப். விருதை 7 முறை வென்ற ஒரே வீரர் சுனில் சேத்ரி மட்டுமே ஆவார்.
- சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிளப் போட்டிகளில் ஆடிய ஒரே இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி மட்டுமே ஆவார். ஐரோப்பாவின் கிளப் டி போர்ச்சுகல் மற்று் வட அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி விசார்ட்ஸ் அணிக்காக ஆடியுள்ளார்.
- சுனில் சேத்ரியின் குடும்பமே கால்பந்து குடும்பம் ஆகும். அவரது தாய் நேபாள நாட்டு அணிக்காக ஆடியுள்ளார். அவரது தந்தை இந்திய ராணுவ கால்பந்து அணிக்காக ஆடியுள்ளார்.
பல்வேறு பெருமைகளை கொண்ட சுனில் சேத்ரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் அளவிற்கு கால்பந்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத காரணத்தால் இந்திய கால்பந்து அணி பெரியளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்திய கால்பந்தை கிரிக்கெட் அளவிற்கு வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதே சுனில்சேத்ரி மற்றும் பாய்சிங் பூட்டியா போன்ற ஜாம்பவான்களின் கனவு ஆகும்.