ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது ஒலிம்பிக் தொடர். ஜப்பானில் நிலவும் தீவிரமான கொரோனா பாதிப்பின் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்கு அவசர நிலை தொடர்ந்து நீடித்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.


அதே நேரம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஒரு பக்கம் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி கொண்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது, இத்தகைய சூழலில் ஒலிம்பிக் தொடரை சாத்தியப்படுத்துவது சிரமமான காரியம் என ஜப்பான் மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் ஜப்பான் பொதுமக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின் படி 70 சதவீத ஜப்பானியர்கள் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


ஆனால் கடந்த ஆண்டு  தொற்றின் தீவிரத்தால் ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு எந்த வகையிலாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இரண்டுமே மும்முரம் காட்டி வருகிறது. எதிர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி "கூடுதல் மருத்துவர் குழுவை அழைத்து வருகிறோம், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையை ஒலிம்பிக் நடைபெறும் மைதானங்கள் மற்றும் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்படுத்துகிறோம்" என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து வருகிறது..



ஜான் கோட்ஸ் - சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, துணைத் தலைவர்.


இத்தகைய சூழலில் தான் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ் "அவசர நிலை தொடர்ந்தால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்விக்கு? - ஆமாம் நிச்சயமாக" என பதிலளித்துள்ளார்.


மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜான் கோட்ஸ் "அதிகப்படியான மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின் பாதுகாப்பாக உணரும் போது, ஒலிம்பிக் தொடரை வரவேற்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.


அதே நேரம் "ஒரு வேலை தொடர்ந்து எதிர்ப்பு நீடித்தாலும், ஒலிம்பிக் தொடரை பாதுகாப்பான முறையில் - வீரர்களுக்கும், ஜப்பான் நகர மக்கள் இருவருக்குமே எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நடத்த நாங்கள் எங்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.



செய்கோ ஹஷிமோட்டோ - டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்


டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு 1.8 லட்சம் பேர் வர இருந்து நிலையில் பாதுகாப்பை கருதி தற்போது 78000 நபர்கள் மட்டுமே வருகின்றனர் என செய்கோ ஹஷிமோட்டோ தெரிவித்துள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு 230 மருத்துவர்கள், 300 செவிலியர்கள், தினசரி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான 80 சதவீத மருத்துவ குழு தயார் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.


ஆகவே என்ன எதிர்ப்பு வந்தாலும், அதன் பாதிப்புகளையும், விமர்சனங்களையும் சமாளிக்க தயாராகிவிட்டது ஜப்பான். திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற தொடங்கிவிட்டது.