டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது அவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிந்துவின் தந்தை பி.வி.ரமணா நமது ஏபிபிக்கு அளித்த பேட்டியில், “நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊடகங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நேற்று நான் அவளை மிகவும் ஊக்கப்படுத்தினேன். ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் பெண்மணி அவர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நேற்றைய போட்டிக்குப் பிறகு அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் அவளுடைய இன்றைய போட்டியில் கவனம் செலுத்தச் சொன்னேன். நான் அவளை ஊக்கப்படுத்தி பேசினேன். ஒட்டுமொத்தமாக அவள் அரங்கத்தில் ஆக்ரோஷமாக இருந்தாள். நான் மீண்டும் மீண்டும் சில ஸ்ட்ரோக்குகளை விளையாடுவதை அவளிடம் சொன்னேன்.நாம் அவளை மகிழ்விக்க வேண்டும். அவர் அடுத்த ஒலிம்பிக்கிலும் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். அவளிடமிருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.
மேலும், வெண்கலம் தங்கத்திற்கு சமம் என்றும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் எனவும் சிந்துவின் தாயார் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதிச் சுற்றில் ஜப்பான் நாட்டின் அகேன் யமாகுச்சியை 21-13,22-20 என்ற கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள தாய் சு யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தாய் சு யிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-18,21-12 என்ற கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் சிந்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் சூழல் உருவானது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 15 முறை மோதியுள்ளனர். அதில் ஹீ பிங் 9 முறையும் சிந்து 6 முறையும் வென்றுள்ளனர். ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டி என்பதால் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமை பி.வி.சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார்.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் சிந்துவின் இரண்டவது பதக்கம் இதுவாகும்.