மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரருக்கு காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

குதிரை சாரட் வண்டியில் உற்சாக வரவேற்பு:

 

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிங்கம்புணரி, இளையான்குடி, திருப்புவனம் என பல்வேறு கிராம பகுதிகள் இருந்தாளும் உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகளில் தங்களது திறமைகளை அதிகளவு வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்திய ராணுவத்திலும், காவல்துறை உள்ளிட்ட பணிகளில் தங்களது பங்களிப்பை அதிகளவு கொடுத்துவருகின்றனர்.

 

இதன் மூலம் சமூக அமைப்புகளை உருவாக்கி மாவட்டத்தில் பல்வேறு உதவிகளையும் செய்துவருவது குறிப்பிடதக்கது. இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஜாய் நடாஷாவிற்கு காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 




கோ - கோ-வில் தங்கப்பதக்கம்:


சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி தான் ஜாய் நடாஷா. இவர் கோ - கோ போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். தன்னுடைய கடின பயிற்சிக்கு பிறகு தனது திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

 

கடந்த வாரம் மலேசியாவில்  உள்ள மலாக்கா பகுதியில்  நடைபெற்ற சர்வதேச அளவிலான கோ - கோ போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றனர். தங்கப் பதக்கம் வென்ற கோ - கோ வீராங்கனை ஜாய் நடாஷாவிற்கு அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

 



காளையார் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், இசை வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  முக்கிய பிரமுகர்கள்  பாராட்டி மகிழ்ந்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ஜாய் நடாஷா கூறுகையில்...,” ஆறாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து கோ - கோ பயிற்சி பெற்றுவருகிறேன். குறுவட்ட போட்டிகள் முதல் மாநில அளவு போட்டிகள் வரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். இந்நிலையில் டெல்லியில் 15 நாட்கள் சிறப்பு விளையாட்டு முகாமில் பயிற்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலேசியா சென்று மலாக்காவின் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டேன்.

 

இந்த சர்வதேச போட்டியில் தங்கம் வென்றுள்ளோம்.  தனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்திய அணிக்காக தமிழகத்திலிருந்து  இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு, இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையை வென்றுள்ளோம்.  முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கோ - கோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.