Para Athlete Mariyappan: “கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா?” வேதனைப்பட்ட ஒலிம்பிக் வீரர்..!

"கிரிக்கெட் போன்று அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் சரிசமமான ஆதரவு கொடுக்க வேண்டும்" என பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் வேண்டுகோள்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும், பரிசு கோப்பைகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

Continues below advertisement

தொடர்ந்து விழாவில் பேசிய பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன், "விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தாலும், வெற்றி மேல் வெற்றி கண்டாலும் கவனத்துடன் கர்வம் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்றார். நான் கல்லூரி காலத்தில் படிக்கும்போது விளையாட்டுப் போட்டிகளில் பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு மைதானமே இல்லை. ஆனால் தற்பொழுது மாணவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேறி மேலே வர வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். நான் விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து சிறப்பு விருந்தினராக வந்து மாணவர்கள் மத்தியில் பேச வேண்டும் ஆசைப்பட்டேன். மாணவர்களாகிய நீங்களும் கட்டாயம் முன்னேறி வரவேண்டும். மாணவர்கள் கவனத்துடன் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் பேசினார். தமிழக அரசும், இந்திய அரசும் விளையாட்டுத்துறையில் பல்வேறு உதவிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதற்குத் திறமைகளை வளர்த்துக்கொண்டு, பயன்படுத்திக் கொள்ளுமாறு" கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு, "தமிழக அரசு விளையாட்டுத் துறைக்கு உலக தரத்தில் உதவி செய்து வருகிறது. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் விளையாட துவங்கும்போது எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பயணம், உணவு உள்ளிட்டவைகளுக்கு எந்தவித உதவியும் இல்லாமல் இருந்தது. தற்போது உலகளவில் எந்த வசதிகள் உள்ளதோ அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ள வீரர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். இதற்கு முன்பாக நான் ஒருவர் மட்டும்தான் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தேன். தற்பொழுது நான்கு பேர் பதக்கம் வென்று வந்துள்ளோம். இப்பொழுது கிராமங்களில் இருந்து வரும் வீரர்கள் விளையாட்டு என்றால் என்று தெரிந்து வருகிறார்கள் என்று கூறினார்.

வேர்ல்டு பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு தங்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கும், இந்தியாவிற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உள்ள வித்தியாசம் என்றால் வெளிநாடுகளில் விளையாட்டு போட்டிகளை மட்டும் தான் பார்க்கிறார்கள். குடும்பம் உள்ளிட்டவைகளை கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்தியாவில் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும், பணிக்கும் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்தியாவில் இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் சிரமப்பட்டால் செயல்பட்டால், நினைக்கும் அளவிற்கு மேல் வந்து மதிப்பான இடத்தை அடையாளம் என்றார்.

விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும், வந்து போட்டிகளில் கலந்துகொண்டேன் என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது. முழு கவனத்துடன் விளையாடினால் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் உள்ள வீரர்கள் வெற்றி பெற்று சாதனை புரிந்து வரவேண்டும் என்பதற்காக அனைத்து வித உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு வேறுவிளையாட்டுப் போட்டிகளுக்கு கிடைப்பதில்லை. கிரிக்கெட் வீரர்களும் விளையாடுகிறார்கள், நாங்களும் விளையாட்டு போட்டிகளில் தான் கலந்து கொள்கிறோம். கிரிக்கெட் போன்று நாங்களும் இன்டர்நேஷனல் போட்டியில் தான் விளையாடுகிறோம். அனைத்து போட்டிகளுக்கும் சரிசமமான ஆதரவு கொடுக்க வேண்டும். கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு மட்டுமே ஊக்கம் கொடுக்கிறார்கள். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும். எவ்வளவு சாதனை புரிந்தாலும் கிரிக்கெட் கிடைக்கும், ஊக்கம் கிடைக்கவில்லை என்று வீரர்கள் வேதனை அடைகிறார்கள். இவை மாற்றமடைந்து வருகிறது. கிரிக்கெட்டைப் போன்று அனைத்து போட்டி ஆதரவு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Continues below advertisement