2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்கவேலு மாரியப்பன்
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் தலைவர் தீபா மாலிக் வெளியிட்டுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்த மேலதிக விவரங்களைப் பகிர்ந்த தீபா மாலிக், ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் நெருக்கடிகளுக்கு இடையே பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. ஊரடங்கு காரணமாக வீரர்களுடன் தொடர்பில் இருப்பது கடினமாக இருந்தது.இருந்தும் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வீரர்களுக்கான இறுதிகட்ட தேர்வுகளை நடத்தி முடித்து உள்ளோம். இதற்கு எங்களுக்கு இந்திய விளையாட்டு வாரியம் பெரும் உறுதுணையாக இருந்தது. ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடத்திய இதற்கான தேர்வுகளில் வாரியம் இறுதிவரை உடனிருந்து உதவியது. இந்திய அணியின் நலன் கருதி சில தைரியமான முடிவுகளை இந்தத் தேர்வுகளில் எடுக்க வேண்டி இருந்தது.முன்னெப்போதும் இல்லாத வகையாக கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சர்வதேசத் தரத்துடன் தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க நிகழ்வில் தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல வருகின்ற 23 ஜூலையில் தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்வில் பாட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து இந்தியக் கொடியை ஏந்திச்செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் 10,000 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஜப்பான் வந்து ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.எனினும், கொரோனா பரவல் அதிகமானால், மூடப்பட்ட மைதானங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஜப்பான் அரசு, டோக்கியோ அரசு, ஒலிம்பிக் தொடர் அமைப்பாளர்கள் குழு, சர்வதேச ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு, பாரலிம்பிக் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது குறித்து ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, ஜப்பானில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 14,500 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். முக்கியமாக, இதுவரை 6.5 சதவிகிதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.