மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. 


மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியன் அணிகளான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து என 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோதியது. இதில் லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.


அதன்படி அதன்படி அரையிறுதிக்கு இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றது. இதில் இந்திய அணி தென் கொரியாவுடன் அரையிறுதி போட்டியில் மோதி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது . அதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்க்குள் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (நவம்பர் 5) ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டனர்.






இதில் 17வது நிமிடத்தில் சங்கீதா குமாரியும், 46வது நிமிடத்தில் நேகாவும், 57வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி மற்றும் 60வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா கோல்கள் அடித்து அசத்தினர். பதிலுக்கு நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு வலம் வந்த ஜப்பானால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் பட்டத்தை வென்றது.


இப்போட்டித் தொடரில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று தோல்வியே பெறாமல் இந்திய மகளிர் அணி வெற்றி நடை போட்டுள்ளது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு சாம்பியன் ஆன இந்திய அணிக்கு இது 2வது கோப்பையாகும். சாதனைப் படைத்த இந்திய வீராங்கனைகளை பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு தலா ரூ.3 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேசமயம் 3வது இடத்துக்கான ஆட்டத்தில் சீனா அணி தென்கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.