இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒரு வழியாக ரிசர்வ் நாளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


நேற்றே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் இழந்திருந்த இந்திய அணிக்கு, இன்றைய ரிசர்வ் நாள் ஆட்டமும் சொதப்பலாகவே இருந்தது. இன்று வீசப்பட்ட 73 ஓவர்களை எதிர்கொண்ட இந்திய அணியை, 249 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் செய்தது. அடுத்து களமிறங்கும் நியூசிலாந்து அணி 139 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும்.


இந்நிலையில், ஐந்து நாள் ஆட்டம் பற்றி மட்டுமின்றி ரிசர்வ் நாளில் கூட வானிலை எப்படி இருக்கும், எத்தனை ஓவர்கள் வீசப்படும் என வெதர் மேன் கணித்துள்ளார். அந்த ட்வீட் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






இது போல, நான்காவது நாள் ஆட்டத்தின்போது, கிரிக்கெட் போட்டி குறித்தும்,  வானிலை குறித்தும் பேசிக்கொண்டிருந்த கிரிக்கெட் விமர்சர்கள் கிக்கின்ஸ் மற்றும்ம் சாம் பெர்ரி தமிழ்நாட்டு நபர் ஒருவரைக் குறிப்பிட்டு பேசினர். அவர் வேறு யாருமில்லை. தமிழ்நாட்டு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் குறித்துதான். சவுத்தாம்ப்டனின் இன்றாவது சூரியன் வருமா? என்று வானிலை குறித்து கிக்கின்ஸ் கேள்வி கேட்க, அதை கணிப்பதற்கு நான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் இல்லை எனக் கூறி சிரிக்கிறார் சாம் பெர்ரி. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் வெதர்மேன் பிரதீப்ஜானை டேக் செய்தனர். இந்நிலையில், ஐந்து நாள் மற்றும் ரிசர்வ் நாள் குறித்தும் வெதர்மேன் முன்கூட்டியே அப்டேட் கொடுத்திருப்பது ஏறக்குறைய நிஜத்தில் நடந்துக் கொண்டிருப்பதுடன் மேட்ச் ஆவதால் வெதர்மேன் ரசிகர்கள் “இவர்தான் பெஸ்ட்டு” என கமெண்ட் செய்து வருகின்றனர்.






அதுமட்டுமின்றி, போட்டி நடைபெற இருக்கும் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு என வெதர் மேன் பதிவிட்டுள்ளார். மழை பெய்யாதபட்சத்தில் ஓவர்கள் வீசப்படும். இலக்கைவிட பந்துகள் அதிகம் இருப்பதால், நியூசிலாந்து அணி போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். 


முன்னதாக, முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, மூன்றாவது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது. நான்காவது நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால், ஒரு பந்துகூட வீசமுடியாத சூழலில் ஆட்டம் கைவிடப்பட்டது. ஐந்தாவது நாள் ஆட்டமும் தாமதாக தொடங்கிய நிலையில், கடைசி நாளான ரிசர்வ் நாள் மட்டும் சரியான நேரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.